அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை குறித்து முக்கிய முடிவு: மாவை

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தமிழரசுக் கட்சி முக்கிய முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாடு மற்றும் நிர்வாகத் தெரிவு என்பவற்றின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி தமிரசுக் கட்சியின் வாலிபர் மாநாடும் அதன் நிர்வாகத் தெரிவும் இன்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்பட்டு அதன் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடைபெறவுள்ள எமது மாநாடு தொடர்பாக கவனம் செலுத்தி தமது கருத்துக்களையும் மாநாட்டில் சமர்ப்பிப்பர்.

ஜெனீவா தீர்மானத்தில் அரசாங்கம் இணை அணுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட விடயங்களை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் கூட நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக கூறி அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில அதில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாமை குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்படும்.

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். அந்த தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச இராஜதந்திரிகளுடன் இலங்கை தமிழரசுக் கட்சி பேசுவதுடன், ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

Latest Offers