வரவு செலவுத் திட்டத்திற்கு ஏன் ஆதரவு கொடுத்தீர்கள்? அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கடிதம்

Report Print Thileepan Thileepan in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கட்சி முடிவை மீறி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்படவுள்ளதாகவும், அவரது பதிலைப் பொறுத்து கட்சி தலைமைக்குழு கூடி முடிவெடுக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் இருந்து மாலை வரை வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட உறுப்பரினர்களின் கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என தீர்மானித்திருந்தோம். குறிப்பாக கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 29, 30 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற எங்களுடைய தேசிய மாநாட்டில் அந்த முடிவை எடுத்திருந்தோம். அந்த முடிவினை நாம் எடுத்தமைக்கு காரணம் யுத்தம்

முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் கூட படைக் குறைப்பு என்பது நடைபெறாமல் மிகப் பாரிய எண்ணிக்கையில் படையினரை அரசு தொடர்ந்தும் பராமரித்து வருகின்ற

காரணத்தினால் பாரிய பொருளாதார சுமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமில்லாமல் சிங்கள மக்களுக்கும் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது.

இது அநாவசியமானது. சாதாரண பொதுமக்கள் தற்போது கூட அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்த நிலமை நீடிக்க கூடாது. நீடிக்கவும் முடியாது. அந்தக் காரணத்திற்காக நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என தீர்மானித்திருந்தோம்.

இடையிடையே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி என்ற வகையிலும், நாங்களும் கூட்டமைப்பின் பகுதியும், பாகமும் என்ற

அடிப்படையிலும் பொதுவான நிலைப்பாட்டின் அடிப்படையில் சில அரசியல் முடிவுகளை மேற்கொண்டிருந்த சூழ்நிலையிலும் கூட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இருக்கவில்லை.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் நாங்கள் திருகோணமலையில் எங்களுடைய பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டியிருந்தோம். இதன்போதும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முன்னர் எடுத்த முடிவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கமைவாக கட்சியினுடைய தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

ஆனால் எங்களுடைய மற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அம்பாறை மாவட்டத்தினுடைய கோடீஸ்வரன் ஆதரவு வழங்கினார். அதனடிப்படையில் அவர் கட்சியினுடைய முடிவை மீறியுள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என விவாதிக்கப்பட்டது. அவர் எங்களது கட்சியோடு கடந்த பல வருடங்களாக தொடர்ந்து இருந்து வந்திருக்கின்ற ஒருவர். இளம் அதரசியல்வாதி.

அம்பாறை மாவட்டத்தின் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர். இவற்றையெல்லாம் நாங்கள் மனதிலே கொண்டு இந்த விடயத்தை விரிவாக, ஆழமாக, பாரபட்சமற்ற வகையில் கலந்துரையாடினோம். இந்த விடயம் தொடர்பில் அவரிடம் விளக்கோர முடிவு எடுத்துள்ளோம். எதற்காக அவர் கட்சியினுடைய முடிவை மீறி செயற்பட்டதாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்படும். நாளைய தினம் அக்கடிதம் அனுப்பப்படும். அவரது பதிலையடுத்து கட்சித் தலைக்குழு குழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Latest Offers