மகிந்தவின் கருத்தை சுட்டிக்காட்டி மைத்திரிக்கு அழுத்தம்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சை முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் வைத்து நேற்று பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதிக்கு இவ்வாறு அழுத்தம் வழங்கியுள்ளனர்.

எனினும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு சம்பந்தமான எந்த பொறுப்பையும் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்படியானால், நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இருக்கும் வேலைத்திட்டம் என்னவென முக்கிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிடம் கேட்டுள்ளனர்.

இந்த கேள்விக்கு ஜனாதிபதியால் பதிலளிக்க முடியாது போயுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதியும், அரசாங்கமும் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ளாமல் இருந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் வழமையான நிலைமையை ஏற்படுத்த தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே மாற்று சரத் பொன்சேகாவே என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களையும் சரத் பொன்சேகாவிடம் வழங்க வேண்டும் எனவும், தற்போதைய சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட விரோதங்களை விட தேசிய பாதுகாப்பு முக்கியமானது என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அரசாங்கத்திற்கோ, பாதுகாப்பு அமைச்சுக்கோ நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஏதாவது சம்பவங்கள் நடந்த பின்னர், பொலிஸார் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தி தேடுதல்களை மட்டுமே பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை வழமைக்கு கொண்டு வர தகுதியான நபர் சரத் பொன்சேகா எனக் கூறியிருந்தார்.

அத்துடன் எந்த சவாலையும் ஏற்க தயாராக இருப்பதாக சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு பொறுப்பை வழங்க ஜனாதிபதி இன்னும் தயாரில்லை எனவும் கூறப்படுகிறது.