முஸ்லிம் மக்களுக்கு இருக்கும் பிரதான பொறுப்பு பற்றி கூறும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமின் செயற்பாடுகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதில் பிரதான பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அவர்கள் அடிப்படைவாதிகளை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சில அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தளர்வான போக்கு கையாளப்பட்டது. இதன் காரணமாகவே இந்த அனர்த்தம் எமக்கு ஏற்பட்டது.

சஹ்ரான் ஹசீமை 2014 ஆம் ஆண்டு காலத்தில் அடக்கி இருக்க வேண்டிய நபர். பயங்கரவாத சாத்தான்களை புனிதர்களாக மாற்றும் செயலை நாம் நிறுத்த வேண்டும்.

இதில் முஸ்லிம் மக்களுக்கு பிரதான பங்கு இருக்கின்றது. உங்கள் மத்தியில் உள்ள அடிப்படைவாதிகளை எமக்கு அடையாளம் காட்டுங்கள். அவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு படையினருக்கு வழங்குங்கள்.

இன பிளவுகளுக்கு இடமளிக்காது, உடைகள் மற்றும் உணவு பழக்கங்களில் அனைவரும் ஓரினமாக ஒன்றிணைய வேண்டும். பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு அடையாளங்கள் இருக்கின்றன. முஸ்லிம்களின் அடையாளங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.