தற்கொலை தாக்குதல் நடத்த முன் பலர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளார்கள்! எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

“தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என வதந்தியை பரப்பி, அதன் ஊடாக நாட்டு மக்களை பதற்றத்தில் வைத்திருக்கவும், ஆட்சியை பிடிப்பதற்கும் விரும்பிய கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்களும், இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்த சிலரும் சம்பளம் கொடுத்து பயன்படுத்திய அமைப்பே தேசிய தௌஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு.”

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சமகால நிலமைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக நாடு கொந்தளிப்பில் உள்ளது. மக்கள் எதிர்பார்க்காத ஒரு தாக்குதல். மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

தற்போது தாக்குதலின் பின்னணிகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியை மையமாக கொண்டு வன்முறையை பிரயோகிக்கவென பலர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அது ஓரிரு நாட்களில் நடந்த விடயமல்ல. அது நீண்டநாட்களாக நடந்திருக்கின்றது. இந்த நீண்டகால தயார்ப்படுத்தலில் தேசிய தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பை பலர் வளர்த்திருக்கின்றார்கள்.

குறிப்பாக அந்த அமைப்புக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக புலனாய்வாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் இந்த தேசிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளதுடன், தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாகவும், அதனை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பாக நான் நாடாளுமன்றில் பேசும்போதும் மறைமுகமாக சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அதாவது தீவிரவாதிகளுக்கும் முன்னைய ஆட்சியில் இருந்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்பட வேண்டும் என கூறினேன்.

காரணம் எமக்கும் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்ற பதற்றத்தை உருவாக்க பாதுகாப்பு தரப்பினர் குறிப்பாக படையினரின் உளவு பிரிவில் உள்ள சிலர் முயற்சிப்பது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றுள்ளார்கள் என்ற வதந்தியை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல் அதனை நாட்டில் உள்ள மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தாக்குதலகளை நடாத்தியுள்ளார்கள்.

அதனை நடாத்துவதற்கு பலர் உபயோகிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒரு அங்கமாகவே தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுணதீவில் பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்ற வதந்தியை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சம்பவம்.

மேலும் அந்த சம்பவம் மாவீரர் நாளுடன் சம்மந்தப்பத்தப்பட்டு மாவீரர் நாளை செய்தவர்களே அதனையும் செய்துள்ளார்கள் என படத்தை காண்பித்து, சந்தேகநபர்களாக முன்னாள் போராளிகளே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதற்கு மேலாக தங்களுடைய வதந்தியை பரப்புவதற்காக வீணாக இரு பொலிஸார் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே படையினரின் உளவு பிரிவில் உள்ள சிலர் முன்னைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்பவர்கள் இவ்வாறு நாட்டில் அசாதாரண சூழல் உருவாக்க செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்த மோசமான மிக கவலையான சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கடக்க முன்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கப்போவதாக அவசர அவசரமாக அறிவித்திருக்கின்றார்.

இவ்வாறான சூழலை பயன்படுத்தி அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறித்து கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தோ்தல் வருகிறது.

அதில் போட்டியிட கோத்தபாய ராஜபக்ச முயற்சித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றதுபோன்ற ஒரு நிலமை உருவாகும்போது அதிலிருந்து நாட்டை பாதுகாக்க பலமான ஒருவர், புலிகளுடன் போரை நடத்திய திறமையானவர், அவர் நாட்டுக்கு தேவை என பலர் சொல்லும் விதமாக தாக்குதல் நடந்துள்ளது.

ஆகவே அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியதுபோல் முழுமையான விபரங்களும் வெளியிடப்படவேண்டும். அதனை மூடி மறைக்ககூடாது. வீணாக பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெவ்வேறு நோக்கங்களுக்காக அப்பாவி மக்களுடைய உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுடைய உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. அது வேறு ஆட்களுடைய தேவைக்காக பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையினை பதவி விலகியுள்ள பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ள பொலிஸ்மா அதிபா் ஆகியோர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள் என்பதை மிக விரைவில் அவர்களே பகிரங்கமாக வெளிப்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

ஆகவே தனக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் சுற்றுலா சென்றார் ஜனாதிபதி, அவர் வெளிநாட்டில் இருந்தபோதும் தகவல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயற்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது.

சட்டம் ஒழுங்கு பிரத்தியேக அமைச்சாக இருந்தது. அவ்வாறு இருந்தபோதே 19ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19ம் திருத்தச்சட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி, மற்றும் சுற்றுசூழல் அகிய அமைச்சுக்கள் மட்டுமே ஜனாதிபதியிடம் இருக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

அந்தேவேளை சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சின் கீழ் இருந்தது. அதனை பிடுங்கி பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி வைத்திருந்தது சட்ட முரணானது.

ஆகவே அந்த பொறுப்பை வைத்திருந்த ஜனாதிபதியே இந்த விடயத்திற்கு பொறுப்புகூறவேண்டும். வெறுமனே பொறுப்புகூறல் என்பது உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நின்றுவிட முடியாது.

ஜனாதிபதி, பிரதமர் இந்த விடயத்தில் பொறுப்புகூறவேண்டும். பிரதமர் தனக்கு ஒன்றும் கூறப்படவில்லை என கூறினாலும், தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என நாட்டுக்கு கூறியிருக்கவேண்டும்.

6 மாதங்கள் பேசாமலிருந்துவிட்டு இப்போது ஒன்றும் தெரியாது என கூறுவது பொறுப்பான செயற்பாடாக கருத முடியாது. மேலும் இது தவிர்திருக்கவேண்டிய குரூரமான சம்பவம்.

மற்றும் இந்த சம்பவங்களின் பின்னணியில் இராணுவ புலனாய்வு பிரிவில் உள்ள சிலர் இயங்கியிருப்பதும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு மாதாந்த சம்பளம் கொடுக்கப்பட்டமை, வவுணதீவு கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இவர்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தெரியவந்துள்ளது.

ஆகவே இது தமிழிழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றதாக காண்பித்து குழப்பத்தை உருவாக்கி அந்த குழப்பத்தின் ஊடாக ஒரு பலவான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மிக கீழ்த்தரமாக செயற்பட்ட சம்பவங்கள் இவை என்பது புலனாகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையிலிருந்து வெளியாகும் உண்மைகள் மறைக்கப்படகூடாது. அவை அம்பலப்படுத்தப்படவேண்டும்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு தரப்பினர் மட்டுமல்ல சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை வளரவைக்க பல உதவிகளை செய்துள்ளார்கள் என்பது புலனாகிறது.

இவை எல்லாவற்றுக்கும் இவர்கள் எதோவொரு வகையில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். உயிரிழந்த மக்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதுடன், மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறியுள்ளது என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.