இலங்கை பொலிஸார் வெளியிட்டிருந்த புகைப்படங்கள்! பெங்களூரில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமா?

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள், இந்தியாவின் பெங்களூர் நகரில் ஊடுருவியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் அரச பத்திரிகையொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

கடந்த ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையின் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த பயங்கரவாதிகளில் சிலர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வசித்து வந்ததை மக்கள் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வருகின்றன.

அடுத்த 15 நாட்களுக்குள் பெங்களூரில், அதுவும் குறிப்பாக வைட்பீல்ட் மற்றும் பெல்லந்தூரு பகுதியில் உள்ள தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பெரிய தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்த வாட்ஸ்அப் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் இந்த வதந்திகளை பெங்களூர் பொலிஸார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக பெங்களூர் நகர பொலிஸின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இது போன்ற தகவல்கள் பொய்யானவை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பொய் செ்யதிகளை பரப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூர்வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.