ஐக்கியத்தின் அடையாளமாக மாறிய பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Report Print Gokulan Gokulan in அரசியல்
188Shares

இலங்கையில் ஐக்கியத்தின் அடையாளமாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திகழ்கின்றார். எனவே, அவரின் தலைமைத்துவ பண்புகளை, நாட்டின் அரசியல் தலைவர்கள் பின்பற்றுவார்களாயின் நல்லிணக்கத்தை இலகுவில் ஏற்படுத்திவிடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது,

அகிம்சை வழியில் அன்பால் எதையும் சாதிக்கலாம், வன்முறைகளையும் கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய பேராயரை இலங்கையர் அனைவரும் போற்றிபுகழ வேண்டும் எனவும் கூறினார்.

மதஸ்தலங்களை நாம் அனைவரும் புனிதபூமியாகவே கருதுகின்றோம். அப்படிபட்ட புனித பூமிக்குள் நுழைந்து, இறைமகன் உயிர்த்தெழுந்த நன்நாளில் பயங்கரவாதிகள் ஊழித்தாண்டவமாடி, அப்பாவி மக்களின் உயிர்குடித்தனர்.

கிறிஸ்தவ மக்களை இலக்குவைத்து மூன்று தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டதால், நாட்டின் மீண்டும் இனக்கலவரமொன்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியது.

இதனால்தான் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன், சமூகவலைத்தளங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

ஆனால், எந்தவொரு பிரச்சினைக்கும் அடாவடி, அடிதடி தீர்வல்ல என்பதை உணர்த்திய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்களை பொறுமைகாக்குமாறும் அறைகூவல் விடுத்தார்.

அத்துடன் நின்றுவிடாமல், ஒரு சிலரின் செயற்பாட்டால் அந்த மதத்தைசார்ந்த அனைவரையும் சந்தேகநபர்களாக கருதிவிடமுடியாது எனவும் எடுத்துரைத்தார்.

அண்மையில் நீர்க்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் மறுநாள் காலை அப்பகுதிக்கு விரைந்த பேராயர், தேவாலயங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும்சென்று, மக்களை சந்தித்து கலந்துரையாடி அமைதிக்கு வழிவகுத்தார்.

ஒரு மதத்தலைவராக தன்னால் எதை, எதையெல்லாம் செய்யமுடியாமோ அவற்றை சிறப்பாக செய்துமுடித்தால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

எனவே, அவரின் தலைமைத்துவ பண்பை முன்னுதாரணமாக எடுத்து பொதுவிடயங்களின்போது நம்நாட்டு அரசியல் தலைவர்கள் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் பல்லின மக்களும் வாழும் இலங்கைத்தீவில் சமாதானம் என்பது நிலையாகவே குடியேறிவிடும்.

அதேவேளை, 21/4 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மகாநாயக்க தேரர்கள், இந்துகுருமார்கள், மௌலவிகள், பேராயர்கள் என சர்வமதத் தலைவர்கள் வழங்கிய பங்களிப்பை என்றும் மறந்திடக்கூடாது. அவர்களை அனைவரையும் போற்றிபுகழவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.