சியோன் தேவாலயம் தொடர்பில் எனக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை! சுமந்திரன் விளக்கம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நான் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் ஆராதனைகளில் பங்கேற்றதோடு, மட்டக்களப்பிற்கு செல்வதற்கு நான் எவ்வித திட்டமிடல்களையும் மேற்கொள்ளவில்லை, அதனைவிட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த எனக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மே முதலாம் திகதி வெளியான டெய்லிமிரர் பத்திரிகையின், "பொலிடிகல் கொசிப்" பகுதியில், நான் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, மட்டக்களப்பு சியோன் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனைகளில் பங்கேற்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும்,

எனினும் எதிர்க்கட்சித் தலைவர், மஹிந்த ராஜபக்ச, குறித்த சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் புலனாய்வுத் துறை தனக்கு அறிவுறுத்தியதாகவும், ஆகவே அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

அது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இதுத் தொடர்பில் நான் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடினேன்.

நான் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் ஆராதனைகளில் பங்கேற்றதோடு, மட்டக்களப்பிற்கு செல்வதற்கு நான் எவ்வித திட்டமிடல்களையும் மேற்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

அதனைவிட எதிர்க்கட்சித் தலைவர் எனக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

22ஆம் திகதி மற்றுமொரு செய்தியை, "தெளிவுபடுத்தல்" என்ற பெயரில் டெய்லி மிரர் வெளியிட்டது. எனினும் அந்த செய்தியில், எதிர்க்கட்சித் தலைவர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் என்னை எச்சரிக்கவில்லை.

தாக்குதல் தொடர்பிலேயே என்னை எச்சரித்தார், மொழிப்பெயர்ப்பில் ஏற்பட்ட பிழையே அதுவெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த செய்தியும் பொய்யான செய்தியாகும்.

இந்த இரண்டு செய்திகளும் நாடாளுமன்ற உறுப்பினரான என்னுடைய சிறப்புரிமையை மீறும் செயலாகும். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த செய்தி மிகப்பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கும்.

ஆகவே இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன். இது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, இது எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.