ரிஷாட் பதியுதீனின் சொத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! எஸ்.பி.திசாநாயக்க கோரிக்கை

Report Print Kanmani in அரசியல்

ரிஷாட் பதியுதீனின் சொத்துக்கள், கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும், குற்றச்செயல்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை தன்னுடைய கட்சியினுடைய பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்ல.

அவருடைய ஒரு மகள் இரண்டு பிள்ளைகளுடன் குண்டு வெடிக்கச் செய்து உயிரிழந்தார். மொஹமட் இப்ராஹிம் எனும் வர்த்தகருடன் அவருக்கும், அவருடைய சகோதர சகோதரிகளுக்கும் உள்ள வர்த்தக தொடர்புகள் போதுமானளவு பேசப்பட்டுள்ளது.

அதேபோல் இப்ராஹிம் குடும்பத்தின் மற்றுமொரு தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமாக இருந்த செப்புத் தொழிற்சாலைக்கு 25,000, 30,000 கிலோகிராம் பித்தளை ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.

அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். செப்புத் தொழிற்சாலை சார்ந்த தொழில் முயற்சியுடன் ரிஷாதின் சகோதரர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அதிகளவில் பணத்தை ஈட்டிக்கொண்டனர்.

துருக்கியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டு செயற்பட்டவர்கள் இங்கு வருகை தந்து கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிலையங்கள், சுற்றுலா நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் அறிவித்திருந்தார்.

அவர்களுடைய அடையாள அட்டை இலக்கத்திலிருந்து வழங்கியிருந்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மிகவும் அக்கறையுடன் தேடி வருகின்றார். பாதுகாப்பு அமைச்சு முன் வந்து இதனைத் தேடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பின்னணியிலிருந்து, இவர்களைப் பாதுகாப்பதாக இறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அவர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

எனவே ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு குறித்த ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.