வரலாற்றில் பாடத்தை கற்று இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

வரலாற்றில் பாடத்தை கற்று இலங்கை இனம் என்ற ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு. சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டு நாம் அனைவரும் வாழ வேண்டும் என கர்தினால் ஆண்டகையும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையில் கத்தோலிக்கர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் ஐக்கியமாக இருக்க வேண்டும். ஒரு சில அடிப்படைவாதிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாம் முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும். பௌத்தர்களை பாதுகாக்க வேண்டும். அதேபோல், இந்துக்கள், கிறிஸ்தவர்களை பாதுகாக்க வேண்டும். பேராயர் மெல்கம் ரஞ்சித் பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினையை எதிர்கொள்ளும் விதம் முழு நாட்டுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளில் நாம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை. நாம் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வெள்ளையர்களை விட நாட்டை நன்றாக ஆட்சி செய்யலாம் என்று நினைத்து நாம் சுதந்திரம் பெற்றோம். எமக்கு பல்லினத்தன்மையும் இனத்துவமும் உள்ளது.

இலங்கையர்கள் என்பதே எமது பலம். இன்னும் எமக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை. அண்மையில் நடந்த சம்பவத்தினால், இலங்கை மீண்டும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது.

ஒரு சிலர் செய்த செயலாளர், எம்மிடம் இருந்த ஐக்கியம் சிதைந்து போயுள்ளதாக முஸ்லிம் மௌலவிகள் தெரிவித்தனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறேன். முஸ்லிம்கள் அனைவரும் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்படவில்லை. 1971 ஆம் ஆண்டில் இளைஞர்களின் புரட்சி காரணமாக நாட்டில் இரத்தம் சிந்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நிலைமை ஏற்பட்டது.

அதேபோல் 30 ஆண்டுகளாக தமிழ் மக்களை அடிப்படையாக கொண்டு கொடூரமான பிரச்சினை இருந்து வந்தது. மத அடிப்படையாக கொண்டு அடிப்படைவாத இஸ்லாம் நோக்கி சென்றுள்ளது. எனினும் 99 வீதமான முஸ்லிம் மக்கள் இதனை நிராகரித்துள்ளனர். தாய் நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.