நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை அரசாங்கம் ஏன் அசமந்தப்போக்கோடு கையாளுகிறது? சபையில் கேள்வி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
47Shares

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை அரசாங்கம் அசமந்தப் போக்கோடு கையாளுகின்றது. முஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என ஏனைய இனவாத குழுக்கள் பரப்பும் செய்திகள் தொடர்பிலும் அரசாங்கம் அக்கறை செலுத்தாதது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளாார்.

விசேட வியாபாரப் பண்ட அறவீடுகள் கட்டளைச்சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் சபையில் உரையாற்றிய அவர்,

பாடசாலை மாணவர்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியாத அரசாங்கத்தால் எவ்வாறு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள?

இன்று பயங்கரவாத தாக்குதலால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காணவில்லை. இந்த தாக்குதலுக்கு முன்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் தான் இருந்தது. இந்த தாக்குதலுடன் அதன் தாக்கம் இன்னமும் அதிகரித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் நாம் நம்பியிருந்த ஒரே விடயம் சுற்றுலாத்துறை மட்டுமேயாகும். இன்று அதுவும் நாசமாகியுள்ளது.

ஆகவே ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலில் எமது மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதும் நாட்டில் நம்பிக்கை இழக்கப்பட்டது மட்டுமல்லாது நீண்டகாலம் எம்மை நெருக்கும் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

அரசாங்கத்தின் மோசமான பொருளாதார கொள்கை இந்த சம்பவத்துடன் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்ததை விடவும் எமது கடன் அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் இன்று பயங்கரவாதத்தை காரணம் காட்டுகின்றனர். அரசாங்கம் செய்த பாவங்களை எல்லாம் பயங்கரவாத தாக்குதலின் மீது போட்டு தப்பித்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இன்று நாட்டின் பாரிய ஹொட்டல்கள் மட்டும் அல்ல, சாதாரண நடுத்தர சுற்றுலா விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தின் தாக்கமும் நாட்டுக்கு பாரிய தாக்கத்தையே ஏற்படுத்தும். முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு மக்கள் செல்ல மறுக்கின்றனர். முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற அநாவ­சிய செய்திகளை பரப்பி மக்களை குழப்பிவருகின்றனர். இது நாட்டுக்கு தான் பிரச்சினையாக அமையும். இந்த தாக்குதலை ஒரு இனத்தின் தாக்குதலாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டாம்.

இனவாதத்தை மதவாதத்தை இதில் உருவாக்க வேண்டாம். அரசாங்கம் இதற்கு தீர்வு காண எந்த முயற்சிகளையும் முன்னெடுக்க வில்லை. அரசாங்கம் இவற்றை கருத்தில் கொள்ளாது அரசியல் காரணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் தொழில் பேட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து எவரும் கருத்தில் கொள்ளவில்லை. ஜப்பானில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் போக்குவரத்து அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். இலங்கையில் இவர்கள் இவ்வளவு பெரிய பிரச்சினையிலும் தமது அமைச்சுகளை தக்கவைக்கவே அக்கறை செலுத்தி வருகின்றனர்.

நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டால் அதற்கான பொறுப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் நிதி அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இவர்கள் பொறுப்புக்கூறுவதில்லை.

பொய்களை மட்டுமே கூறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒன்று நன்றாகவே தெரியும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் மக்கள் மீது வரியை சுமத்தலாம் மக்கள் கடன்களை கட்டுவார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

எமது அரசியல் வாதிகளுக்கு நாட்டின் தூரநோக்கு திட்டம் என ஒன்றும் இல்லை . அடுத்த ஒரு வருடத்தில் நாட்டுக்கு வரும் நெருக்கடி குறித்து இந்த ஆட்சியாளர்கள் எந்த முன்னாயத்தமும் இல்லாமலேயே ஆட்சி செய்கின்றனர்.

பாடசாலை மாணவர்களின் நம்பிக்கையையே வெற்றிகொள்ள முடியாத இந்த அரசாங்கம் எவ்வாறு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வு காண முடியாது. இது பலவீனமான அரசாங்கம் என்றார்.