இன்று கிழக்கு தமிழர்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள்!

Report Print Kumar in அரசியல்

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு காரணமாகவே தமிழர்கள் கிழக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை இன்று கிழக்கு தமிழர்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தல்களின் போது அதற்கான தக்க பதிலை மக்கள் வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தங்களது போலி முகங்களையும் பிழைகளையும் மறைத்துக்கொண்டு, மீண்டும் மக்கள் முன் செல்வதற்கான வழியாக தமது கட்சி மீதும் தமது தலைவர் மீதும் சேறுபூசி வருகின்றனர்.

தமது செய்திகளை ஊடகங்கள் இரட்டிப்பு செய்து வருவதாகவும் அதனால் தமது செயற்பாடுகள் தொடர்பில் வெளிவருவதில்லை .

மட்டக்களப்பு, ரிதிதென்றையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பிலும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பிலும் தமிழரசுக்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சி மீதும் எமது தலைவர் மீதும் கடந்த சில தினங்களாக சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இவர்கள் மாற்றின அரசியல்வாதிகளுடன் பல்வேறு தொடர்புகளை பேணுகின்ற அதேவேளையில் வீரவசனங்களை பேசி தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கி வருகின்றனர்.

இவர்கள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாத வங்குரோத்து அரசியல் நிலைமையில் இருக்கின்றவர்கள், பிச்சைக்காரனுக்கு புண் கிடைத்தது போன்று மக்களை ஏமாற்றுவதற்காக தமது கட்சி மீது சேறுபூசும் வேலையினை முன்னெடுத்துள்ளனர்.

புணானை கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ஹிரா பவுண்டேசனுக்கு உரித்தான மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி இதன் உரிமையாளராக இருக்கின்ற கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு காணியினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மகிந்த ராஜபக்ஸவுடன் பேசி பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் காலத்தில் இது தொடர்பிலான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு சரியான விளக்கங்களை நாங்கள் வழங்கியிருந்தோம். ஒரு தகவல் இல்லாமல் கருத்துகளை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவது கவலைக்குரியது.

புணானை கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள 49 ஏக்கர் வரையிலான காணி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய காணியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய காணி அதிகாரத்தினை கொண்டுள்ளார். இதற்கான தீர்மானத்தினை அந்த சபையே மேற்கொள்கின்றது.

இதற்கும் எமது கட்சியின் தலைவருக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. 13ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவாக காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இல்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

காணி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் ஹிரா பவுண்டேசனும் இணைந்து இதற்கான ஒப்பந்ததினை 2017ஆம் ஆண்டே செய்துள்ளனர்.

எமது தலைவர் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள் இருந்தா சந்திரகாந்தன் இந்த காணியினை பெற்று கொடுத்தார்.

2016ஆம் ஆண்டு தை மாதம் 17ஆம் திகதி இந்த பல்கலைக்கழகத்திற்கான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கட்டுமான பணிகள் 2016ஆம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டவர் ஜனாதிபதியாகவும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பாளராகவும் இருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுக்கும் பிரதமர் இந்த நாட்டின் அரசாங்கத்தினை வழிநடத்துகின்றார்.

இவ்வாறான நிலையில் மக்களிடம் சென்று வீரவசனம் பேசுவதைவிடுத்து முட்டுக்கொடுக்கும் அரசாங்கத்துடன் பேசி இறுக்கமான தீர்மானத்தினை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் எடுங்கள். எதனையும் செய்யாமல் மக்களிடம் சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேறுபூசுவது எந்த விதத்தில் நியாயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு காரணமாகவே தமிழர்கள் கிழக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை இன்று கிழக்கு தமிழர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். எதிர்வரும் தேர்தல்களின் போது அதற்கான தக்க பதிலை மக்கள் வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.