மதுஷின் வாக்குமூலத்தால் கைதாக போகும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்

Report Print Steephen Steephen in அரசியல்
450Shares

பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் தற்போது தன்னுடன் தொடர்புகளை வைத்திருந்த பல்வேறு தரத்திலான பொலிஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்ற புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான அறிக்கையை விரைவில் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பொலிஸ் உயர் அதிகாரிகள் மாகந்துரே மதுஷூடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்து உள்ளதுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவும் அவர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

நாமல் குமார என்ற நபர் செய்த முறைப்பாடுக்கு அமைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய மதுஷ் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாலக டி சில்வாவை தவிர இந்த விடயம் சம்பந்தமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தது.

மாகந்துரே மதுஷ் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.