அமெரிக்க குடியுரிமை இரத்து - உத்தியோகபூர்வ ஆவணம் கோத்தபாயவிடம் கையளிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா பிரிவின் பொறுப்பதிகாரி கையெழுத்திட்ட இந்த ஆவணத்தை கையளிக்க, கோத்தபாய ராஜபக்ச அண்மையில் தூதரகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் கோரிக்கை அடங்கிய விண்ணப்பத்தை கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கோத்தபாய கையளித்திருந்தார். அந்த விண்ணப்பம் இரண்டு வாரங்கள் விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சரியாக செலுத்தியுள்ளாரா என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி கோத்தபாய தனது அமெரிக்க கடவுச்சீட்டை அமெரிக்க தூதரகத்திடம் கையளித்தார். இதனையடுத்து அடுத்த மூன்று வாரங்களில் அவரது குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் வெளியிடப்பட்டது.

அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து கோத்தபாய தற்போது, இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளார். குடியுரிமையை இரத்துச் செய்யும் விடயத்தில்,அவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக அந்நாட்டு ராஜாங்க திணைக்களமோ தூதரகத்தின் விசா பிரிவோ கவனம் செலுத்தியிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.