சிவனொளிபாதமலை புனிதம் தொடர்பான பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படும்! ரணில் வாக்குறுதி

Report Print Gokulan Gokulan in அரசியல்

நல்லதண்ணி நகர அபிவிருத்தி திட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சிவனொளிபாதமலை புனிதம் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா நல்லத்தண்ணி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்துகொண்டு நல்லதண்ணி நகர அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த டிசம்பர் மாதம் பொகவந்தலா பிரதேசத்தில் சுற்றுலா தளம் அமைப்பது தொடர்பில் அப்பிரதேசத்திற்கு விஜமொன்றை மேற்கொண்டுடிருந்தேன். அதேபோல தற்போது மஸ்கெலியா நல்லதண்ணி நோட்டன் பிரதேச நகர் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலத்தப்பட்டுள்ளது.

வசந்த காலத்தில் நுவரெலியாவிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் வருவதை போல புனித பூமியான நல்லதண்ணி சிவனொளிபாத மலைக்கும் யாத்திரிகளும் உல்லாச பயணிகளும் அதிகம் வருகின்றார்கள்.

விசேடமாக பௌத்தம், கிருஸ்தவம் இந்து என பலரும் வந்து செல்லும் தளமாகும். ஆகவே இந்த பிரதேசத்தையும் நவீன முறையில் சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும். அதே போல புனித தளத்தின் புனிதம் பாதுகாப்பும் அவசியமாகின்றது அதற்கேற்ற வகையிலே எமது திட்டம் நடைபெறும்.

நல்லத்தண்ணி சீத்தகங்குளம் பாதுகாப்பது மிக அவசியமானதொன்று. சித்தககுளம் மாசடையும் பட்சத்தில் புனித பூமியின் புனிதமும் மாசடையும் நிலை ஏற்படும்.

எனவே இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். அடுத்த சிவனொளிபாதமலை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் அதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை சீர் செய்து வெளிநாட்டு பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் நல்லத்தண்ணி நகர் அபிவிருத்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நகர வர்த்தகர்களையும் கொழும்பிற்கு அழைத்து கலந்துரையாடலொன்று விரைவில் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச தலைமையில் நல்லதண்ணி வெட் ரெஸ்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, பிரதேசபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.