ஒரே குடைக்குள் புலனாய்வு அமைப்புகள்

Report Print Subathra in அரசியல்

அமெரிக்காவில், 9/11 தாக்குதலுக்குப் பின்னரும், இந்தியாவில் 26/11 தாக்குதலுக்குப் பின்னரும், பாரியளவில், புலரனாய்வுக் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் இடம்பெற்றிருந்ததாக கட்டுரையாளர் சுபத்ரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

இலங்கையில், 21/4 தாக்குதலுக்குப் பின்னர், அதேபோன்ற புலனாய்வுக் கட்டமைப்பு மறுசீரமைப்புள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், புலனாய்வு கட்டமைப்பு மறுசீரமைப்புள் இடம்பெற்றிருந்த போதும், 21/4 தாக்குதலைத் தடுப்பதில் அது தோல்வி கண்டுவிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே, என்.ஐ.ஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அனுப்பிக் கொண்டிருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உதாசீனம் செய்யும் அளவக்கு பலவினமான நிலை இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இருந்துள்ளமை உறுதியாகியிருக்கிறது.

புலனாய்வு பிரிவினர் மீதான சட்டநடவடிக்கைகளால் தான் அது பலவீனப்பட்டு விட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட கூறியிருக்கிறார். தாங்கள் ஆட்சியில் இருந்த போது உருவாக்கிய, ஐயாயிரம் பேர் கொண்ட இராணுவ புலனாய்வு கட்டமைப்பை தற்போதைய அரசாங்கம் சிதைத்து விட்டது தான், இந்த தோல்விக்கான காரணம் என்று கூறியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, 2012ஆம் ஆண்டும் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளரை அமெரிக்காவுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளித்தாகவும் அவரை கொண்டு புலனாய்வு அமைப்புகளை மறுசீரமைப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அரபு மொழி தெரிந்தவர்களையும் புலனாய்வு கட்டமைப்பில் இணைத்து அதனை பலப்படுத்தி இருந்த போதும் தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் பாழாக்கி விட்டது என்பதே அவரின் குற்றச்சாட்டு, ஆனால் இவர்களின் குற்றச்சாட்டுகளை ஐ.தே.க தரப்பு ஏற்றுக் கொள்ள தயாரில்லை.

கோத்தபாய ராஜபக்சவுக்கு அருகில் கூட குண்டு வெடித்ததே, அப்போது அவரால் தடுக்க முடிந்ததா என்றும், கோத்தபாயவுக்கு நெருக்கமான முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, சங்கரீலா விடுதியின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த போதும், குண்டு வெடிப்பை அவரால் தடுக்க முடிந்ததா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பத்தாயிரம் பேர் கொண்ட புலனாய்வு பிரிவு தற்போதுள்ள போதும், ஏழு புலனாய்வு அதிகாரிகள் மாத்திரம் சிறையில் உள்ளனர் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. புலனாய்வு தவறுகள், உரிய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

21/4 தாக்குதலை தொடர்ந்து, தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைக்க மூன்று பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

அதுபோலவே கோத்தபாய ராஜபக்ச தலைமையில் முன்னாள் படைத் தளபதிகளை கொண்ட குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை கோரியிருந்தார், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச. அந்த அறிக்கையும் இப்போது ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எப்படி இது போன்ற தாக்குதலை தடுக்கலாம் என்ற ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கின்றன. இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் பொதுப்படையான விடயம், நாட்டின் புலனாய்வு அமைப்புகளை ஒன்றிணைத்தல். அல்லது ஒரே குடையின் கீழ் கொண்டு வருதலாகும்.

இலங்கையில் பல புலனாய்வு அமைப்புகள் செயற்படுகின்றன. அரச புலனாய்வு சேவை (state intelligence servise - SIS), இராணுவ புலனாய்வு பணியகம் (directorate of military intelligence - DMI), கடற்படை புலனாய்வு பணியகம் (directorate of naval intelligence - DNI), விமான புலனாய்வு பணியகம் (office of air intelligence - CIO), குற்றவியல் விசாரணை திணைக்களம் (criminal investigation department - CID), தீவிரவாத விசாரணை பிரிவு (terrorist investigation devision - TID), பொலிஸ் விசேட பிரிவு (police special branch - SB), சிறப்பு அதிரடிப்படை புலனாய்வு பிரிவு (special task force (stf) intelligence branch) என்பன அவற்றில் சில.

இவை தவிர பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒவ்வொன்றிலும் புலனாய்வு மற்றும் தகவல் திரட்டும் பிரிவுகள் உள்ளன. வெளியே அறியப்படாத சில ரகசிய புலனாய்வு அமைப்புகளும் கூட இருக்கக்கூடும்.

இவ்வாறு பல்வேறு புலனாய்வு அமைப்புகளை கொண்டிருந்தும், இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள், ஐ.எஸ் அமைப்பின் துணையுடன் தாக்குதல்களை நடத்தும் வரை எதையும் கண்டறிய முடியாமல் இருந்துள்ளது.

அதுபோக இந்திய புலனாய்வு அமைப்பு கொடுத்த தகவலை கொண்டு கூட இந்த புலனாய்வு அமைப்புகளால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. இதற்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியது மாத்திரம் காரணம் அல்ல. அதற்கு அப்பால், பல்வேறு புலனாய்வு அமைப்புகளை கொண்டிருந்தும் அவற்றை ஒருங்கிணைக்கின்ற கட்டமைப்பொன்று இருக்காததும் ஒரு காரணம்.

21/4 தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி லெப் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, பொலிஸார் தமது புலனாய்வு தகவல்களை இராணுவத்திற்கு தருவதில்லை என்று கூறியிருந்தார்கள். அது அதிர்ச்சியை கொடுத்த ஒரு தகவலாகும்.

ஏனென்றால் ஆறு மாதங்களுக்கு மேலாக ஜனாதிபதியின் வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் திணைக்களம் இருந்த போதும், புலனாய்வு தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கவில்லை.

வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளும் வசதி இருந்த போதும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு இடையில் தகவல்களை பரிமாறும் ஒழுங்கமைப்புகள் இருக்கவில்லை.

ஒவ்வொரு புலனாய்வு பிரிவும் தமது வழிகளில் பயணம் செய்திருக்கின்றனவே தவிர, முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களை கண்டு கொள்ளவில்லை. வவுணதீவு பொலிஸார் படுகொலைகள் விடயத்தில் கூட இந்த புலனாய்வு பிரிவுகள் முன்னாள் போராளிகளை தான் பிடித்து துருவிக்கொண்டிருந்தன.

இதனை சாதகமாக்கிக் கொண்டு உண்மையான குற்றவாளிகளான இஸ்லாமிய தீவரவாதிகள் இலாவகமாக தப்பியிருக்கிறார்கள். புலனாய்வு தவறு என்பது 21/4 தாக்குலில் தான் நிகழ்ந்தது என்று கூறுவது முழுப்பொய்.

அந்த தவறு வவுணதீவு சம்பவத்திலேயே தொடங்கி விட்டது. மாவனெல்ல சம்பவங்கள், வனாத்தவில்லு வெடிபொருள் கண்டுபிடிப்பு போன்ற சம்பவங்களின் போது கூட புலனாய்வு பிரிவுகள் தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர் தான் இப்போது எல்லா தரப்பு அறிக்கைகளிலும், ஆலோசனைகளிலும் புலனாய்வு பிரிவுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

தவறுகள் தான் பாடங்களை கற்று கொடுக்கின்றன. அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு காரணமான அதே விடயம் தான், இலங்கையில் 21/4 தாக்குதலுக்கு காரணமாகியிருக்கிறது என்றது ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளேக், மெரிக்கா அதன் எவ்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுக்கும் இடையில் சரியான தொடர்புகளை பேணிக்கொள்ள தவறியமை 9/11 தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்று என்றும் அது மிகப்பெரிய தவறு எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியாவில் மக் எனப்படும் (multi agency center - MAC) அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் உள்ளடக்கிய அமைப்பு ஐ.பி எனப்படும். intelligence bureau தலைமையகத்தில் இருக்கிறது. இது இந்தியாவில் நடக்கவிருந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. சில தோல்விகளையும் சந்தித்திருக்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் இதன் செயற்பாடு ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. 26/11 தாக்குதலுக்கு பின்னர் 2009ஆம் அண்டு இந்தியா உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளினதும் புலனாய்வு தகவல்களை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்யக்கூடிய வகையில் மக் அமைப்பு மீள அமைக்கப்பட்டது.

றோ, சி.பி.ஐ, ஐ.பி, எ.ன்ஐ.ஏ மற்றும் இராணுவ புலனாய்வு அமைப்புகள், பொலிஸ் புலனாய்வு அமைப்புகள் என இந்தியாவின் 24 புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த மக் அமைப்பு இருக்கிறது.

இங்கு நாளாந்தம் தகவல் பரிமாற்றப்படுகின்றன. நாளாந்தம் இந்த அமைப்பில் இருந்து பத்து தொடக்கம் 15 புலனாய்வு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே நடந்து விடக் கூடியவை என்றில்லை. ஆனால் நடக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கப்படுபவை.

மக் கட்டுப்பாட்டு அறையினால் பெறப்படும் எந்தவொரு தகவலும் உடனடியாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு பிரிவினால் பின்தொடரப்படும். மக் மேசையை கையாளும் ஐ.பி அதிகாரி தனது அறிக்கையை மாத்திரம் ஆவணப்படுத்த மாட்டார்.

தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் குறிப்பிட்ட பின்தொடர்ந்து வரும் நபருக்கான ஒரு கோப்பையையும் உருவாக்குவார். 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் பதிவுகள், எச்சரிக்கைகள் ஒவ்வொரு நாள் காலையிலும் உள்துறை அமைச்சு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஐ.பி மற்றும் றோ உள்ளிட்ட ஏனைய உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும்.

மாநில அளவிலும் ஒரு துணைக்கட்டமைப்பு இது போன்று செயற்படுகிறது. 2002ஆம் ஆண்டில் இருந்தே இந்த கட்டமைப்பு செயற்பட தொடங்கி இருந்தாலும், 2009 இலேயே இது முற்றிலுமாக புதிய தோற்றத்தை பெற்றது. ஒவ்வொரு வேலை நாளிலும், மக் கூட்டங்களில் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன.

அதில் 24 புலனாய்வு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். இவ்வாறான ஒரு புலனாய்வு வலையமைப்பை கொண்டு தான் உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டும், முறியடித்தும் வருகிறது.

அமெரிக்கா, இந்தியா மாத்திரமின்றி பிரித்தானியாவும் கூட இதற்கு விதிவிலக்கானது அல்ல. கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த, பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பென் வலஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது, பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இராணுவ புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய பென் வலஸ் “ஐ.எஸ் எப்போதும் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை செய்வதற்கு புதிய தந்திரோபாயங்களை கையாளுகின்றது.

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு இந்த உலகளாவிய முற்சியில் ஒருவருக்கொருவர் தகவல்களை பகிரந்து கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உளவுத்துறை முக்கியம்.

லண்டனிலும், மான்சஸ்டரிலும் அல்கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதல்களை அடுத்து பிரித்தானியாவில் இப்போது நாங்கள் கூட்டு தீவிரவாத பகுப்பாய்வு மையம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றோம். (joint terrorism analyzing center) .

வெவ்வேறு விசாரணை அமைப்புகளில் இருந்து கிடைக்கும் புலனாய்வு அறிக்கைகள் அனைத்தையும் பகுப்பாய்வு செய்வதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைப்பாடுகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

இதுபோன்றதொரு புலனாய்வு அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இலங்கைக்கு உதவ பிரித்தானியா தயாராக இருக்கிறது என கூறியிருந்தார். இலங்கையை பொறுத்தவரையில் பல்வேறு புலனாய்வு அமைப்புகளை கொண்டிருந்தாலும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கு எல்லா புலனாய்வு அமைப்புகளினதும் அறிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கான கட்டமைப்பொன்று இல்லை.

கூட்டு நடவடிக்கை பணியகம் போன்ற ஒரு கட்டளை அமைப்பு புலனாய்வு கட்டமைப்பிலும், உருவாக்கபடுவதற்கான சூழல் தென்படுகிறது, இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்துழைக்காவிடினும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் இதனை உருவாக்காமல் விடப்போவதில்லை போலவே தெரிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.