ஈஸ்டர் தாக்குதலுக்கு நாட்டின் தலைமைத்துவமும் பொறுப்பு: மெல்கம் ரஞ்சித்

Report Print Steephen Steephen in அரசியல்

அதிகாரிகள் மற்றும் நாட்டின் தலைமைத்துவமும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்கு பொறுப்பு கூற வேண்டும் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக விசேட திருப்பலி பூஜை கொட்டாஞ்சேனை புதிய லூசியாஸ் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது திருப்பலி பூஜையை நடத்திய நிலையில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இறைவனின் விருப்பத்தின் பேரில் நடைபெறவில்லை என்பது தெளிவானது. அது மனிதனின் பாவ செயலில் அடிப்படையில் நடந்தது.

இது தனிப்பட்ட ரீதியில் என் மீதும் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல். துயரத்தில் நான் இன்னும் கஷ்டப்படுகிறேன்.

இவை பற்றி நன்கு அறிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மட்டுமல்ல நாட்டின் தலைமைத்துவமும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று நான் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

கைகளை கழுவ முடியாது, இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதிகாரங்களில் இருந்து இறக்கி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இப்படி பொறுப்புக் கூற முடியாதவர்கள் எமது நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியற்றவர்கள். அவர்களை நீக்க வேண்டும்.

இன்னும் சிலர் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எதுவும் செய்யாத புனிதர்கள் போன்று சிலர் இருக்கின்றனர். தப்பி சென்று விடலாம் என்று இவர்கள் இன்னும் நினைக்கின்றனர்.

மனிதனின் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்காவிட்டாலும் இறைவனின் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

குற்றம் நடக்காதது போல் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களை தேடி தண்டனை கொடுக்க தயங்கும் அனைவரும் இறைவனின் தண்டனை கிடைக்கும்.

தமது சுயநலத்தை நிறைவேற்றி கொள்ளவும் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும் அனைவரும் தண்டனை கிடைக்கும். தற்போது என்னையும் பின் தொடர்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். நான் பயப்பட போவதில்லை.

எனது உயிர் உங்களுக்கு சொந்தமானது. இறைவனுக்கு சொந்தமானது. அதனை எந்த நேரத்திலும் பூஜிக்க நான் தயாராக இருக்கின்றேன் எனவும் வணக்கிற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.