விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி மற்றும் சர்வதேச பயங்கரவாதம் இரண்டையுமே நாங்கள் நன்கு அறிவோம்! கோத்தபாய ராஜபக்ச

Report Print Jeslin Jeslin in அரசியல்

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்து மட்டுமல்ல சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளையும் கடந்த அரசாங்கம் இனங்கண்டிருந்தது, எனினும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்து எமது காலத்தில் சிறந்த ஒருங்கிணைப்பொன்று இருந்து வந்தது. தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிறப்பான வழிமுறையில் முன்னெடுக்கப்பட்டன.

இது மட்டுமல்லாது அனைத்து கட்டமைப்புக்களும் அன்று பலமாக இருந்தமையாலேயே எம்மால் அன்று விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தது.

அதே போல் பயங்கரவாதம் தொடர்பிலும் நாம் அன்று மிகவும் அவதானத்துடனேயே செயற்பட்டோம். இது குறித்த நடவடிக்கைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த விசேட அதிகாரியொருவரை நாம் அமெரிக்காவுக்கு பயிற்சிகளுக்காக அனுப்பியிருந்தோம்.

அவர் இதற்கான பயிற்சிகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் அவரை புலனாய்வு துறையின் தலைவராக நியமித்து முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைத்தேன்.

தேசியம் மற்றும் சர்வதேச ரீதியாக பயங்கரவாத்தை கண்காணிக்கும் பொறுப்பே அவருக்கு பிரதானமாக வழங்கப்பட்டது.

கணினி உள்ளிட்ட அதியுச்ச தொலில்நுட்பசாதனங்கள் மட்டுமன்றி, அரபு மொழி தேர்ச்சி பெற்ற அதிகாரிகளையும் அன்று எமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமித்திருந்தோம்.

இவ்வாறு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் கூடிய அக்கறையுடனேயே செயற்பட்டு வந்தோம்.

எனினும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த செயற்பாடுகள் தொடரவில்லை என்றே குறிப்பிட வேண்டும். பயங்கரவாதச் செயற்பாடுகளை கண்காணிப்பது குறித்து தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் இந்த அரசாங்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் பயங்கரவாதத்தை கண்காணிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. தற்போதுள்ளவர்கள் புலிகளின் மீள் எழுச்சி குறித்து அதிக அக்கறை செலுத்தினார்களே தவிர சர்வதேச பயங்கரவாதம் குறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதன் பாரதூரத்தை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. இதனாலேயே இவ்வளவு விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

நாமும் புலிகளின் மீள் எழுச்சி குறித்து மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளையும் இனங்கண்டிருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers