புலிகள் காலத்தில் கூட இப்படி இல்லை! கறுப்பு ஜூலைக்கு இடமளிக்க வேண்டாம் : மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

கறுப்பு ஜூலைக்கு மீளவும் இடமளிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டிய தருணம் இதுவென கூறியுள்ளார்.

தேசியப் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமை மற்றும் புலனாய்வுப் பிரிவினரை வலுவிழக்கச் செய்தமை ஆகிய காரணிகளினால் நாட்டில் இன்று இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளதாகவும், பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகள் யுத்தம் செய்த காலத்தில்கூட இவ்வாறான ஓர் சூழ்நிலை உருவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் பலம்பொருந்திய தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த எமக்கு, இன்றைய சூழ்நிலையை சமாளிப்பது சிரமமானதாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முஸ்லிம் சமூகத்தினரையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள இந்த தீவிரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது பொறுப்புக்களை ஆற்றத் தவறியுள்ள நிலையில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட வேண்டாம் எனவும், கறுப்பு ஜூலை கலவரத்தின் போது அப்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இன்று வரையிலான சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்பானவர்கள் அரசாங்கத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிர்வரும் காலங்களில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையை சீர் செய்ய வேண்டுமாயின் புத்திசாதூரியமாக செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers