முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் அரசியல் சக்தி

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஏற்படாத முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த வன்முறைகள், தாக்குதல் நடந்து மூன்று வாரங்களில் நடந்துள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான வன்முறைகளின் பின்னணியில் அரசியல் சக்தி செயற்பட்டுள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறை தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக கூறி ஊடக சந்திப்புகளை நடத்திய நாமல் குமார, டேன் பியசாத் ஆகியோர், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த கபில ஹெந்தாவிதாரணவை சந்தித்து இரகசியமான கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடந்து மூன்று வாரங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத - மதவாத வன்முறைக்கும், மேற்படி சந்திப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற தெளிவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அத்துடன் நாமல் குமாரவுக்கும் மாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவுக்கும் இடையில் சில காலமாக இருந்து வந்த பகையை டேன் பியசாத் தலையிட்டு தீர்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களுடன் நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் தாக்குதல் சம்பந்தமாக பொலிஸார் கைது செய்திருந்த, எதிர்க்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பலவந்தமாக அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் நாமல் குமாரவும் அங்கிருந்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்தே இந்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.