அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்! கெஹெலிய

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர் எனகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பு மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய போவதாக கூறினர். எனினும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 24 நாட்களுக்கு பின்னர் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது.

இதற்கு பின்னர் நாடு முழுவதும் தேடுதல்கள் நடத்தப்பட்டன. தேடுதல்களின் போது கைப்பற்றிய பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

குறிப்பாக வெல்லம்பிட்டியவில் குண்டு தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையில் பணிப்புரிந்து 9 பேருக்கு சில மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்டது. இதனால், அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக இல்லாமல் போனது.

இந்த சம்பவம் நடந்து 3 , 4 நாட்களுக்கு பின்னர், பிணை வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றனர்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற பிரச்சினையில்லை. தொழிற்சாலையில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது தெரிந்திருக்கும் என்பதே சாதாரண மக்கள் நினைக்கின்றனர்.

தாக்குதல் சம்பந்தமாக சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அது பற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

திகன சம்பவத்தின் போது புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு 109 பேர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பரவாயில்லை. இந்த சட்டம் மற்ற இடங்களில் அமுல்படுத்தப்படவில்லை.

இதனால், சட்டம் இரண்டு விதமாக அமுல்படுத்தப்படுகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்படும். பிரச்சினை என்னவென்று பொலிஸாரிடம் தொடர்புக்கொண்டு விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

றிசார்ட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

அசாத் சாலி, முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் நீதிபதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறினார். இவை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அழைத்து வாக்குமூலங்களை கூட பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர்.

அகில விராஜ் காரியவசம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைகீழாக நின்றுக்கொண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள் என்று கூறினாலும் பெற்றோர் அனுப்பு மாட்டார்கள் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.