ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏகோபித்த ஆதரவு!

Report Print Kanmani in அரசியல்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த பிரேரணைக்கு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெறுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஏகமனதாக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் கையொப்பமிடுவதற்கு அதிகளவிலான உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட்டனர். நாளைய தினம் சபாநாயகரை சந்திப்பதற்கு அனுமதி பெற்று அதனை கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்கு காரணம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் எதிராக அல்ல. இவர்கள் பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாதங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை அடுத்தாவது ரிஷாட் பதியுதீனை அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, நீக்கி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனைபோல, ரிஷாட் பதியுதீன் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் போலியானவை என்று நினைத்திருந்தால் சிறந்த மனிதராக அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்து சட்டத்தின் முன்னிலையாகியிருக்கலாம். தான் குற்றமற்றவர் என்று அவர் நினைத்திருந்தால் இதனை செய்திருக்கலாம்.

அதுவும் நடக்கவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மக்கள் இன்று கட்சி, பேதம் பார்ப்பதில்லை. கட்சி, பேதங்களை தாண்டி அனைவரும் இணைந்துசெயற்படும் தலைமைத்துவத்தையே எதிர்பார்கின்றனர்.

எனவே இந்த பிரேரணைக்கு ஆளும், எதிரணி என்று வேறுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களின் நம்பிக்கை, எதிர்பார்பினை நிறைவேற்றும் வகையில், இந்த பிரேரணை விவாதத்துக்கு வரும் நாளில், ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நாங்கள் முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கைதான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.

இதேவேளை, எமது தரப்பினர் ஆட்சியை கைப்பற்றும்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான சட்ட வரைவொன்றை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் குழுவொன்று இன்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.