சட்டம், ஒழுங்கு அமைச்சு பொன்சேகாவிடம் இருந்திருந்தால்...? ஆதங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் உள்துறை அமைச்சு பதவியை வழங்கியிருந்தால், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நம்பிக்கையை ஏற்படுத்தும் பெரிய நடவடிக்கைகளை காண முடியவில்லை என்ற காரணத்தினாலேயே முப்படையினர், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் வழிக்காட்டலில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தயங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் இதனை விட பாரதூரமான சம்பவங்கள் நடந்த சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கங்கள் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக மக்கள் மத்தியில் காணப்படும் அவநம்பிக்கையை போக்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிபுணரான சரத் பொன்சேகாவுக்கு பொறுப்பை வழங்கியிருக்கலாம் எனவும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனமாக செவிமடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.