புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

Report Print Sumi in அரசியல்

நீண்டகாலமாக தீர்வு காணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம் இல்லாத நிலையில் அவற்றை சாத்தியமாக்குவதிலும், செயற்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்காலங்களில் மக்கள் எமக்கு முழுமையான அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் எம்மால் உரிய முறையில் தீர்வுகண்டுகொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணையிலுள்ள கட்சி பிரதேச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் குறித்த பிரதேச ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மக்கள் எம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பு ஒருபோதும் வீணாகமாட்டாது. குறிப்பாக தீவக மக்கள் காலத்திற்கு காலம் எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகளுக்கு சரியானதொரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

வேலணை பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாம் எமது கட்சியினூடாக பல்வேறுப்பட்ட மக்கள் நலன்சார்ந்ததும் இன்னும் பல்வேறு விதமானதுமான செயற்திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

அதேபோன்று எதிர்காலங்களிலும் இவ்வாறே முன்னெடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்காக நாம் அனைவரும் புரிந்துணர்வுடனும், அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்” என தெரிவித்தார்.

இதனிடையே வேலணைப் பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவதானம் செலுத்தியிருந்த அதேவேளை சபையின் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.