ஊடகங்கள் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர எடுத்த தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் உள்ள சில ஊடகங்கள் ஏற்பட்டுள்ள நிலைமையை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க நினைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இனவாதத்தை தூண்டும் ஊடகங்களுக்கு அரசாங்கத்தின் விளம்பரங்கள் வழங்கப்படுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை விரிவாக கலந்துரையாடியது. குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சில ஊடகங்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றன.

ஊடகங்கள் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நான் தொடர்ந்தும் கூறி வந்தேன். நிலைமை இந்த அளவு வரும்வரை செயற்படவில்லை என அமைச்சர்கள் என்னை குறை கூறினர்.

குறிப்பாக இரண்டு தொலைக்காட்சி ஊடகங்கள் இருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் பெரும் அழிவை ஏற்படுத்த இவ்விரு தொலைக்காட்சிகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொலைக்காட்சிகள் தெளிவான நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றன.

மேலும், மற்றொரு ஊடக நிறுவனத்துடன் எமக்கு எப்போதும் பிரச்சினை உள்ளது. எமது பிரதமர் அதில் பெரும் தாக்கங்களுக்கு உள்ளாகி வருகிறார். நானும் அந்த நிறுவனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றேன். எனினும் தற்போதைய நிலைமையில் குறித்த ஊடகம் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொண்டது என்பதையும் கூற வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு தொலைக்காட்சிகளும் இனவாதத்தைத் தூண்டி வருகின்றன. சிங்கள மக்களை தூண்டி விடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் செய்திகளை திரிப்புப்டுத்தி வெளியிடுகின்றன. முஸ்லிம் மக்கள் கத்திகளை கொண்டு சிங்களவர்களை தாக்க போகின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

உங்களுக்கு தெரியும் எமக்கு முஸ்லிம் நண்பர்கள், அயலவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 99 வீதமானோர் இந்த பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

அடிப்படைவாதிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து தண்டனைகளையும் வழங்குமாறும் முஸ்லிம்கள் கூறுகின்றனர். நடு நிலையான முஸ்லிம் மக்கள் காரணமாகவே அடிப்படைவாதத்தை துரிதமாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. அடிப்படைவாதிகளை அடக்க உளவு தகவல்களையும் முஸ்லிம் மக்களே வழங்கினர்.

எனினும் முஸ்லிம் மக்களை அனைவரையும் பயங்கரவாதிகளாக காண்பிக்க முயற்சித்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் வாள் கத்திகளை எடுத்துக்கொண்டு சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு எதிராக வீதியில் இறங்க போகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வாள்கள், கத்திகளை சேகரிப்பதே இந்த ஊடகங்களின் ஒரே கடமையாக இருக்கின்றது.

இது பற்றி நான் ஜனாதிபதியிடம் அண்மையில் கூறும் போது பொலன்நறுவையில் தனது கட்டிலுக்கு கீழேயும் வாள் இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

அமெரிக்காவில் போன்று துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதிப் பத்திரம் வழங்குவதில்லை என்பதால், வீடுகளுக்கு இரவில் திருடன் அல்லது எதிரி வரலாம் என்பதற்காக சாதாரண மக்களின் வீடுகளில் வாள் ஒன்றை தற்காப்பு ஆயுதமாக வைத்திருப்பார்கள்.

இதனை ஒரு இனத்திற்கு வரையறுத்து அதன் ஊடாக பகையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வர்த்தகம் சம்பந்தமாக பகையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். முஸ்லிம் கடைகள் சம்பந்தமாக பகையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட ஒளி அலைக்கற்றைகளை வைத்து அழிவுகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்றால், ஒளி அலைகள் நிலத்தை விட பெறுமதியானது. இலங்கையில் மட்டுமே ஒளி, ஒலி அலைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சில நாடுகளில் இந்த ஒலி, ஒளி அலைகள் 7 வருடங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும். அந்நாடுகள் இதன் மூலம் பெரிய வருவாயை ஈட்டுகின்றன.

அத்துடன் அவற்றை பயன்படுத்தும் போது பல சமூக பொறுப்புடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இது ஜனநாயக நாடுகளிலும் காணப்படுகிறது. இலங்கையில் இதற்கு சட்டங்கள் இல்லை.

இதனை பார்த்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆச்சரியமடைகின்றன. சட்ட திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கும் போது பல வழிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் அரசாங்கமே விளம்பரங்களை வழங்குகிறது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இந்த மாதம் 15 மில்லியனை வழங்க வேண்டியுள்ளது. இனவாதத்தை தூண்டும் கறுப்பு ஜூலையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஊடகங்கள் பற்றி மாத்திரமே நான் பேசுகிறேன்.

அரசாங்கத்தை முடிந்தவரை விமர்சியுங்கள், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை விமர்சியுங்கள். அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை விமர்சியுங்கள். இவற்றை கூறுகிறார்கள் என்பதற்காக நாங்கள் எவரையும் எதிர்க்க போவதில்லை. அவற்றை மூடி மறைக்க போவதுமில்லை.

அதற்கான விளம்பரங்களை வழங்குவதை குறைக்க போவதுமில்லை. இனவாதம் மற்றும் மனித குருதியில் பயன் பெற நினைக்கும் ஊடகங்கள் இருக்குமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையாக செயற்பட வேண்டும். தூண்டுதல் மற்றும் எரியூட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்குறிப்பிட்ட இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் விளம்பரங்கள் வழங்குவது தடை செய்யப்படுகிறது. அரசாங்கத்தை விமர்சித்தால் எந்த பிரச்சினையும் இல்லை. சில வாரங்கள், மாதம் வரை பார்ப்போம்.

மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு அமைய முடிவில் மாற்றிக்கொள்வோம். சில பத்திரிகைகளும் இருக்கின்றன. ஏனைய விடயங்கள் சம்பந்தமாக அதிகாரிகள் முடிவுகளை எடுக்க முடியும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.