இலங்கை வந்துள்ள துருக்கிய பயங்கரவாதிகள்: விசாரணைகளில் சிக்கல்

Report Print Steephen Steephen in அரசியல்

துருக்கியில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் இலங்கை வந்துள்ளதாக துருக்கி தூதரகம் அறிவித்துள்ள போதிலும் அது தொடர்பான விசாரணைகளுக்கு அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தடையாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர், ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

துருக்கி பயங்கரவாதிகள் 50 பேர் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக துருக்கி தூதுவர், வெளிவிவகார அமைச்சின் ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள், அடையாள அட்டை இலக்கங்களையும் வழங்கியுள்ளார். எனினும் விசாரணைகளுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் தடையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இறுதியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் பிரதி என்னிடம் இருக்கின்றது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு நான் ஒரு கடிதத்தை அனுப்பினேன். ஜனவரி 31 ஆம் திகதி சதோசவுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை வெளியில் எடுத்துச் சென்று, வெள்ளவத்தையில் முஸ்லிம்களை 4 பேரை ஏற்றிக்கொண்டு பேச்சுவார்த்தைக்காக காத்தான்குடிக்கு சென்றுள்ளனர்.

சம்மாந்துறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பெப்ரவரி 4 ஆம் திகதி மீண்டும் அந்த வாகனங்களில் திரும்பி வந்துள்ளனர். வாகனங்களில் ஜீ.எஸ்.பி.கருவிகள் இருப்பதால் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு கோரினேன்.

இந்த இரண்டு வாகனங்கள் காத்தான்குடியில் உள்ள பயிற்சி முகாமுக்கும் அருகில் உள்ள ஆயுத களஞ்சியத்திற்கும் சென்றுள்ளன என சதோச அதிகாரிகள் நம்புகின்றனர் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர், சில முஸ்லிம் அரசியல் தலைவர்களை குறி வைத்து பயங்கரவாதம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை குறித்த முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதுடன் அரசியல் ரீதியாக சேறுபூசும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.