மைத்திரிபால சொல்வதை செய்யும் ஜனாதிபதி அல்ல: பெங்கமுவே நாலக தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயங்கரவாதத்தை தோற்கடிக்க போவதாக கூறினாலும் அது பிரயோசனமில்லை எனவும் அவர் சொல்வதை செய்யும் ஜனாதிபதி அல்ல எனவும் தேசிய உரிமை அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

களனி விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவது போல், இந்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வரும் தேவையில்லை. தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் தண்டனை வழங்க போதுமானது.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், ஆளுநர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை, தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியவர்கள் என்பதை முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. தவறியேனும் பதியூதீன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றால்,அவர் மேலும் உயரத்திற்கு செல்வார்.

இவர்கள் குறித்து தனியான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு ஜனாதிபதி ஆளுநர் பதவிகளை வழங்கியது மிகப் பெரிய தவறு. இவர்கள் இருவரும் அடிப்படைவாதத்திற்கு கடந்த காலத்தில் இருந்தே ஆதரவளித்து வருகின்றனர்.

இப்படியான அடிப்படைவாதிகளுக்கு ஆளுநர் பதவிகள் கிடைத்தால் என்ன நடக்கும். இதனால், நான் பயப்பட போவதில்லை என்று ஜனாதிபதி வீராப்பில் பேசுவதில்லை பயனில்லை. இப்படியான பின்னணி ஏற்படுத்தி, இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றமைக்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்கவேண்டும் எனவும் பெங்கமுவே நாலக தேரர் கூறியுள்ளார்.