ஹிஸ்புல்லாவின் நோக்கம் இதுவே! தனது வாயால் கூறினார் - விஸ்ணுகாந்தன்

Report Print Thileepan Thileepan in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கி அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும், சவுதிக்கு அரபு படிக்க செல்வதாக சென்ற பலர் ஆப்கானிஸ்தானில் பயிற்சி எடுப்பதாகவும் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் இ.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த ஒவ்வொரு அரசுகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தமது கதவுகளை திறந்து கொடுத்தார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்களை எதிரியாகவும், தீவிரவாதியாகவும் பார்த்து கொண்டு முஸ்லிம் மக்களை மடியில் இருந்தி வைத்திருந்தார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் எந்தவகையிலும் இந்த நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் அல்ல. விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் போர் நடந்ததே தவிர, சிங்க மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் போர் நடந்ததில்லை.

தமிழ் மக்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்பமாக தற்கொலை செய்து மற்றவர்களை அழிப்பவர்கள் அல்ல. தீவிரவாதத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை மக்கள் தேசிய கட்சியும் பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

சர்வதேச நாடுகளிடம் இருந்து இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு மற்றும் அமைப்புக்களுக்கு பணம் ஏதோவொரு வகையில் வந்து கொண்டே இருக்கிறது.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியிலுள்ள அல் ஜிம்மா என்ற நிறுவனம் தண்ணீர் கொடுப்பதற்கென கிணறுகளையும், குழாய் பம்பிகளையும் அமைத்து கொடுத்துவிட்டு சிவப்பு கலரில் வர்ணப் பூச்சு பூசிவிட்டு அரபி வாசகத்தில் ஒரு கல்லை பதித்து விடுகிறார்கள்.

இங்கிருக்கின்ற தமிழ், சிங்கள மக்களுக்கு அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பல தடவை சொல்லியிருக்கிறோம். இரண்டு வருடத்திற்கு முன் அக்கரைப்பற்றில் வைத்து உண்மையாக இந்த நாட்டை நேசிக்கின்ற முஸ்லிம் சகோதரர் எனக்கு சொன்னார்.

ஜமாத்துல்லா என்கின்ற அமைப்பு ஒன்று இலங்கைக்கு வருகின்றது. அவர்களை எப்படியாவது தடை செய்யுங்கள் என்றார்.

அவர்கள் மதத்தை கற்றுக் கொடுக்க வருகிறார்களா? அல்லது இராணுவ பயிற்சி கொடுக்க வருகிறார்களா? அல்லது ஆயுதம் தயாரிக்கிறார்களா? என நான் புலனாய்வுத்துறைக்கு தொலைபேசி மூலம் கேட்டு தெரியப்படுத்தி இருந்தேன்.

இவர்களை சட்டப்படி விசாரணை செய்து தடை செய்யுங்கள். அல்லது பாரிய விளைவு ஏற்படும் என சொல்லியிருந்தேன். ஆனால் இன்று அவ்வாறு நடந்த பின்னர் புலனாய்வுத்துறையில் இருந்து தெரிந்தவர் ஒருவர் தொலைபேசி அழைப்பெடுத்து நீங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இருந்து நாம் பல தடவை தெரியப்படுத்தினோம். இதற்கு பிரதானமான சூத்திரதாரி ஹிஸ்புல்லாவே. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை துறந்து விட்டு ஆளுநர் என்ற போர்வையை போர்த்திய பின்னரே தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்களே பிரதான சூத்திரதாரிகளாக காணப்பட்டனர். அதாவது இதற்கு பிரதானமான இடம் காத்தான்குடி. காத்தான்குடியில் இருந்து கொண்டு தான் இவர்கள் தமது எல்லா வேலைகளையும் எல்லா மாவட்டங்களுக்கும் பரந்து செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் அதுவும், 672 பேர் இருக்கின்றார்கள் என்ற தகவலையும் நான் புலனாய்வுத்துறைக்கு கொடுத்திருந்தேன். ஹிஸ்புல்லா அமைச்சராக இருந்த போது அவருக்கு பல தொகை பணம் சட்ட ரீதியாகவும், சட்ட ரீதியற்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை இன்னும் இந்த அரசாங்கம் விசாரிக்கவில்லை.

75 ஆயிரம் கோடி ரூபா பணம் வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் பணம் வியாபாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது. இதனை கண்டு பிடிக்காது ஜனாதிபதியும், பிரதமரும் ஏன் மூடி மறைத்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளிடம் இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என்று மீளாய்வு செய்யுங்கள். வியாபாரிகளிடம் மீளாய்வு செய்யுங்கள். இந்த நாட்டில் வறுமைக் கோட்டிற்கு மேல் இவ்வளவு மக்கள் இருக்கின்ற போது முஸ்லிம் மக்களிடம் எப்படி இந்த பணங்கள் வந்து சேர்ந்தது. இந்த பணத்தை வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு அனுப்பி அங்கிருந்து கறுப்பு பணமாக வருகிறது.

இதனை அவர்கள் விசாரிக்கவில்லை. ஒரு இடத்தில் 10 குடும்பங்களுக்கு வீடு கட்டி குடியமர்த்தும் போது அவர்களுக்கு பிரமாண்டமான பள்ளிவாசல அமைத்து கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு அரசாங்கத்தை தாண்டி இந்த பணம் எப்படி வருகிறது. ரணில் விக்ரமசிங்க சொல்கிறார் முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று.

தமிழ் மக்களுக்கு எதிராக போர் செய்த போது முஸ்லிம் மக்கள் தமக்கு உதவியதாக கூறுகிறார். சின்ன விடயங்களுக்கே இங்கே சட்டம் இருக்கும் போது தீவிரவாதம் கொண்டு வரப்படும் போது அதனை விசாரிக்க சட்டம் இல்லையா.

சவுதிக்கு அரபு படிக்க சென்றவர்கள் தொடர்பாக விசாரியுங்கள். அவர்கள் சவுதிக்கு செல்வதாக ஆப்கானிஸ்தான் சென்று பயிற்சி எடுக்கிறார்கள். 1500 இற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அமைச்சர் றிசாட் பதியுதீன் அரபு கல்வி என்ற பெயரில் தனது சிபார்சு மூலம் பலரை அனுப்பி வைத்துள்ளார்.

இதையெல்லாம் இந்த அரசாங்கம் இதுவரை காலங்களில் ஏன் பொருட்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு தற்போது கண்ணீர் வடிக்கிறார்கள்.

கிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம். தாக்குதல்கள் நடந்தால் தங்களது முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காக அவர் ஆளுநர் பதவியை எடுத்தார். மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திய அந்த தற்கொலை தாக்குதல்தாரி மட்டக்களப்பு பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு தான் சகல வேலைகளையும் செய்துள்ளார்.

இந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் பாதுகாப்பதற்கு ஆளுநர் பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் அதிகாரத்தை கொடுத்திருந்தார். தாக்குதலில் இருந்து பாதுகாக்க கல்லடி பாலத்திற்கு அண்மையில் இருந்த பெரிய முஸ்லிம் படகுகளை முஸ்லிம் மக்கள் அகற்றியிருந்தார்கள்.

ஆகவே அவர்களுக்கு திட்டவட்டமாக தெரிந்திருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா. 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிஸ்புல்லா, தனது வாயால் கூறியிருந்தார்.

ஆயுதங்கள் வழங்கப்பட்டது என்று. அன்றைய பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களை பெற்று கொண்டு ஊர்காவல் படையை உருவாக்கினார். அவர்கள் எத்தனையோ பேரை சுட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இராணுவத்துடன் சேர்ந்து அதிகாலை வேளைகளில் வீடுகளை தட்டி மக்களை எழுப்பி எடுத்து வெட்டி படுகொலை செய்தார்கள். இதற்கு எல்லாம் மூல சூத்திரதாரி ஹிஸ்புல்லா என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால் கதைக்க பயப்படுகின்றார்கள்.

கிழக்கில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, கிரான்குளம் படுகொலைகள் எல்லாவற்றையும் விசாரித்து பார்த்தால் உண்மை தெரியும். இராணுவத்துடன் சேர்ந்து பிரேமதாசவிடம் ஆயுதங்களைப் பெற்று தமிழ் மக்களை கொலை செய்தார்கள். இதற்கு விசாரணை நடத்த வேண்டும்.

இன்று ஹிஸ்புல்லாவின் கையில் அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தான் இன்று கிழக்கு மாகாணம் முழுவதும் அவர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தொடர்ந்தும் தருவதாக இருந்தால் நீங்கள் உடனடியாக இந்த கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களை பதவி விலக்க வேண்டும். இதனை நாம் பல தடவை தெரியப்படுத்தியிருக்கிறேன்.

இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். அதுமட்டுமல்ல சிங்களம், தமிழ் என்பது இந்த நாட்டின் தாய்மொழி. ஆங்கிலம் என்பது பொதுவான ஒரு மொழி. ஆனால் அரபு மொழிகளில் ஆங்காங்கே வாசங்கள் போடப்படுகிறது.

இந்த வாசங்கங்கள் ஏன் போடப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆகவே இதற்கு எல்லாம் தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த ஹிஸ்புல்லா அவர்களை பதவி இறக்கிட்டு விசாரணை செய்யுங்கள்.

அதன் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் நடந்ததிற்கும், இவருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்று தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் 90ஆம் ஆண்டு ஆயுதம் வழங்கி தமிழ் மக்களை கொலை செய்தமைக்கு விசாரணை செய்ய வேண்டும்.

அவர் முதலிடுவதற்கு என இங்கு அழைத்து வந்த அரபிகளை யார் என்று கண்டறிய வேண்டும். பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளில் உள்ள சில முஸ்லிம்களுக்கும் தீவிரவாத்துடன் தொர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

அத்துடன், அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதும் விசாரணை கமிசன் அமைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது சரியா, பிழையா என்ற வாதம் இருந்தது. ஆனால் இன்று பார்கின்ற போது அவர்களை வெளியேற்றியது சரி என்கின்றேன்.

அவர்களை வெளியேற்றா விட்டால் யுத்தத்தை நடத்தியிருக்க முடியாது. ஆனால் இன்று சமாதானம் ஏற்பட்ட பின்னர் றிசாட் பதியுதீன் வடமாகாணம் முழுவதும் முஸ்லிம் மக்களை குடியமர்த்தினார்.

இன்று குடியமர்த்தப்பட்ட பல குடியிருப்புக்கள் அங்குள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் இன்று ஆயுதங்கங்கள் மீட்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள் எப்படி வந்தது. சாதாரணமான ஒருவர் ஆயுதங்களை கொண்டு செல்ல முடியாது.

கொண்டு போகவேண்டுமாக இருந்தால் சாரியானதொரு பாதுகாப்பு உள்ள வாகனத்தின் மூலமே கொண்டு செல்ல வேண்டும். றிசாட் பதியுதீனது ஆட்கள், அவர்களது வாகனங்களில் தான் இவற்றை கொண்டு போயிருக்க வேண்டும்.

வடமாகாணத்திற்கு ஆயுதங்கள் எப்படி போனது. ஏன் பிடிபடவில்லை. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் கண்ணை மூடி தான் இப்படி செய்துள்ளார்கள். எனவே இவர் தொடர்பாகவும் விசாரணை வேண்டும் என தெரிவித்தார்.