சஹரானிற்கு நினைவுத்தூபி அமைத்து நினைவேந்தல்? பொலிஸார் அதற்கு பாதுகாப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஈஸ்டர் தினத்தில் இலங்கையை அதிரவைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுகூரவும் அவர்களுக்கான நினைவுத் தூபியை அமைக்கவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,

நாளைய தினத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஒருமாதகாலமாகின்றது. இந்நிலையில், இதன் பிரதான சூத்திரதாரியான சஹரானை நினைவுக்கூரும் வகையில், அவருக்கு நெருக்கமானோர் நினைவுத் தூபியொன்றை ஏற்படுத்தினால் அது சட்ட பூர்வமானது என்பதை அரசாங்கம் அறியுமா?

சஹரான் மட்டுமன்றி, இந்தத் தாக்குதலில் இறந்த அனைத்து தற்கொலை தாரிகளையும் நினைவுக்கூர்ந்து நினைவேந்தல் ஒன்று அனுஷ்டிக்கப்படுமானால், அதனை தடுக்க சட்டத்தில் இடமில்லை என்பது இந்த அரசாங்கத்துக்கு தெரியுமா?

இழப்பீடுகளை வழங்கும் அலுவலகங்களை ஸ்தாபிக்கும் 2018- 34 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக தீவிரவாதிகளுக்கு நினைவுத் தூபிகளை கட்டுவது மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை கொண்டுவந்தபோது நாம் எதிர்ப்புக்களை வெளியிட்டோம். ஆனால், அரசாங்கம் இதனை நிறைவேற்றியது.

இதனால், உயிரிழந்த சஹரான் உள்ளிட்டவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றால் கூட, பொலிஸார் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இவற்றை இனியேனும் இல்லாதொழிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு, ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேடமாக ஆராயவுள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், இதன் விவாதத்தை உடனடியாக நடத்துவதற்கான திகதியை நாம் சபாநாயகரிடம் கோரவுள்ளோம்.

ரிஷாட்டுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், விவாதத்தின்போது இன்னும் பல குற்றங்கள் ஆதாரத்துடன் முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

எனவே, இந்த விவாதத்துக்கு இரண்டு நாட்களை ஒதுக்க வேண்டும் என்று நாம் சபாநாயகரிடம் நாளை வலியுறுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.