மேற்குலக நாடுகள் இலங்கையில் முகாம்களை அமைக்க முயற்சிக்கின்றன - மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

மேற்குலக நாடுகள் இலங்கைக்குள் முகாம்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த நிலைமையானது நாட்டின் எதிர்காலத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் செய்துக்கொள்ள உள்ள சோபா உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளோம். இதற்கு எதிராக மக்கள் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். முழு சமூகமும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த அச்சத்தில் இருந்து மக்களை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாகவே நாங்கள் வீதியில் இறங்கினோம். முதலில் மக்களிடம் இருக்கும் அச்சத்தை போக்க வேண்டும். இல்லையென்றால், இந்த காரணத்தை கூறி இவர்கள் தேர்தலை ஒத்திவைப்பார்கள். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்.

அப்படி நடந்தால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வோம். தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.