பௌத்தம் ஒரு மதம் கிடையாது அது ஓர் கோட்பாடு: நிதி அமைச்சர்

Report Print Kamel Kamel in அரசியல்

பௌத்தம் ஓர் மதம் கிடையாது எனவும் அது ஓர் கோட்பாடு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தாம் பௌத்த கொள்கைகள் கோட்பாடுகளை எதிர்ப்பவன் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

சிலர் என்னை பௌத்த மதத்திற்கு எதிரானவன் என பிரச்சாரம் செய்வதில் சிரத்தைக் காட்டி வருகின்றனர்.

எவ்வாறெனினும் இலங்கை வரலாற்றில் மிகக் கூடுதலான தொகை நிதி இந்த பௌத்த விரோதிகளின் காலத்திலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நான் உண்மைகளை பேசும் போது சிலர் என்னை பௌத்த எதிரி என அடையாளப்படுத்துகின்றனர். நான் யாதார்த்தத்தை வெளிப்படுத்தும் போது என்னை இழிசொல் கொண்டு அழைக்கின்றனர்.

நான் பௌத்த கொள்கைகள் கோட்பாடுகளை கடைபிடிக்கின்றேன். பௌத்த கொள்கை என்பது ஓர் மதம் கிடையாது. கௌதம புத்தர் ஒரு மதம், ஒரு இனம் என்ற அடிப்படையில் தனது கொள்கைகளை போதிக்கவில்லை. உண்மையில் பௌத்தம் இந்த உலகிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதில்லை, அது அண்ட சராசரங்களுக்கும் பொருந்தக்கூடியது.

எனினும் சில காவியுடையணிந்த சிலர் பௌத்த மதம் என ஒன்றை உருவாக்கி இந்த நாட்டில் பௌத்த கொள்கைகளை வளர்த்து அதன் ஊடாக சாப்பிட முயற்சிக்கின்றனர்.

மஹாசோன் பலக்காய போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.

வங்குரோத்து அடைந்த சில கட்சிகள் நாட்டை மீண்டும் கறுப்பு ஜூலை கலவரத்திற்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.