பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தேர்தலில் எம்மை தோற்கடிக்க வேலை செய்தவர்: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலில் இல்லாத நபர் நாட்டின் தலைவராக வர வேண்டும் எனக் கூறி அரசியலுக்குள் வரும் திட்டம் சில நபர்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் மக்களை ஏமாற்றி விட்டு மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரசியல் ஒப்பந்தத்தை நிறைவேற்று நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அங்கத்தவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் வேண்டாம், 225 பேரும் வேண்டாம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பவர்களும் அரசியல் ஒப்பந்தத்தையே செய்கின்றனர். அப்படி கூறி தெரிவு செய்யப்படும் நபர் இறுதியில் அரசியலையை மேற்கொள்வார்.

புதிய இளம் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை பெற்றது.

உங்களது அர்ப்பணிப்பு காரணமாக கட்சி இந்த வெற்றியை பெற்றது. பயங்கரவாத குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் கிழக்கு மாகாணத்துடன் தொடர்புடையவர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எம்மை தோற்டிக்க செயற்பட்ட நபர்.

முஸ்லிம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று எமக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டவர். இந்த நபருக்கு யாருடன் தொடர்பு இருந்தது என்பது வெளியாகி விட்டது.

அண்மையில் வீதிகளை மூடி விட்டு, அமைச்சர்கள் பயணித்த வாகன தொடரணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது திட்டமிட்டு ஒழுங்கு செய்து நடத்திய சம்பவம் அல்ல.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இது தெளிவுப்படுத்தியுள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.