வெற்றி பெற்றுள்ள மோடிக்கு சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிக நெருங்கிச் செயலாற்ற ஆவலாயுள்ளோம் என அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருவெற்றியினைப் பெற்றுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றார்கள்.

இந்நிலையில் மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைப்பதற்கு பாரத மக்களது நம்பிக்கையை பெற்ற தங்களிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய மக்களிற்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களிற்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எமது வாழ்துத்துதல்களை தெரிவித்து கொள்கிறோம். எதிர்வரும் வருடங்களில் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல மைல்கற்களை நீங்களும் இந்திய மக்களும் அடைய நாம் பிரார்த்தனை செய்கிறோம் .

இத்தருணத்தில் இலங்கை மக்களிற்கு விசேடமாக தமிழ் பேசும் மக்களிற்கு தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்தும் வருங்காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தர தீர்வினை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும் ஸ்திரத்தன்மையினையும் நிலைநாட்டும் முகமாகவும் மிக நெருங்கி செயலாற்ற ஆவலாயுள்ளோம்.

மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களின் சார்பில் தங்களது உயரிய பதவியில் நீங்கள் திறம்பட செயலாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.