மக்களின் அபிலாசைகளை தமிழ் பிரதிநிதிகள் பூர்த்தி செய்ய வேண்டும்

Report Print Kumar in அரசியல்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர, மத்திய அரசாங்கத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய செயற்படுவார்களானால் அவர்கள் தமிழ் சமூகத்தினால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பிரதி தலைவர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலத்தில் இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மத்தி அரசும், மாகாணசபையும் வேலைத்திட்டங்களைச் செய்யும் போது தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தன.

கடந்த காலத்தைப் போல் 2019இல் இருந்து புறக்கணிக்கப்படக் கூடாது. இதை சீரமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசுக்குரிய நிதியை ஓதுக்கீடு செய்யும் போது வறுமை, விகிதாசாரம், சனத்தொகை, காணியின் பரப்பளவு பார்க்கப்பட வேண்டும். இவை பார்க்கப்படாததால் வாகரை, கிரான், செங்கலடியில் ஒரு பகுதி, வவுணத்தீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசங்கள் இன்னும் வறுமையில் உள்ளன.

நியமனத்தின் போதும் திறமையும், இனவிகிதாசாரமும் பார்க்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்திலும், மத்திய அரசிலும் திறமையும், சிரேஸ்ட விகிதாசாரமும் பார்க்கப்பட வேண்டும்

புதிய பிரதேச செயலகம் உருவாக்குதல்

1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகம் இன்று கூட அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணம்.

கல்வி வலயங்கள் உருவாக்குதல்

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கான கல்வி வலயத்தை கடந்த காலத்தில் பிரித்து விட்டார்கள் இனிமேல் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் பாடசாலைகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய வலயங்களை உருவாக்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைகள் உருவாக்குதல்

14 பிரதேச செயலகத்திற்கும் 14 உள்ளூராட்சி சபைகள் இருக்க வேண்டும். கிரான், வாழைச்சேனை, வாகரை பகுதிகளிலுள்ள காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதற்காக 12 உள்ளூராட்சி சபைகளே இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கிரானுக்குரிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

புதிய அரச அலுவலகங்கள் திறத்தல்

இது தொடர்பாக மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் முஸ்லிம் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் முஸ்லிம் பகுதிக்கும், தமிழ் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் தமிழ் பகுதிக்கும் திறக்கப்பட வேண்டும்.

முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் முகாம்கள் அமைத்தல்

இம்முகாம்கள் அமைப்பது தொடர்பாக இனிமேல் முஸ்லிம் கிராமங்களில் முகாம் அமைக்காமல் தமிழ்பகுதிகளில் முகாம் அமைப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

முப்படைகளுக்கும், பொலிஸாருக்கும் ஆட்களை திரட்டுவதில் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு மத்திய அரசு விகிதாசார ரீதியாக பொலிஸாரை நியமிக்க வேண்டும்.

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் தாம் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பொதுவான முடிவுகளை ஏற்று தனது கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும். பாடசாலையின் பொதுவான முடிவுகளுக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

தமிழ் பிரதேசங்களில் அரச நிர்வாகங்களில் வேலை செய்கின்ற முஸ்லிம்களுக்கு கலாச்சார விடயங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மதங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா?

காணி வழங்குவது தொடர்பாக பிரதேசத்திற்குரிய மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும்.

அமைச்சுக்களின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் குழுகூட்டங்களில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற மேற்குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தமிழ் சமூகத்திற்கு மத்தியில் அலசப்படுகின்றன. இதன் காரணமாக அபிவிருத்தியில் கூட தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் பாதிக்கப்படக்கூடியவாறு செயற்பாடுகள் நடந்து வந்தன.

குறிப்பாக, முஸ்லிம் அமைச்சர்கள் அரசுடன் இணைந்து கொண்டு அரசின் நிதி ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு அப்பால் சென்று தங்களது இனத்திற்காகவும் தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்காகவுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

குறிப்பாக,கோறளைப்பற்று வடக்கு - வாகரை, கோறளைப்பற்று தெற்கு - கிரான், ஏறாவூர்பற்று - செங்கலடியில் ஒரு பகுதி, மண்முனை மேற்கு - வவுணதீவு, மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை, போரதீவுப்பற்று - வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்களை உற்று நோக்குவோமேயானால் நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் 20 வருடங்களுக்கு மேல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றன.

இப்பகுதியில் வறுமை தாண்டவமாடுகின்றது. இதேவேளை காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வருடாவருடம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றன.

கேள்வி கேட்கும் பட்சத்தில் அமைச்சுக்கான நிதி அமைச்சு அனுமதியுடன் அபிவிருத்தி வேலைகள் செய்யப்படுகின்றன. வருடந்தோறும் கிராம சேவையாளர் பகுதிகளுக்கு மேலும் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை.

வறுமைப் பகுதிகள் இருக்க வறுமை அற்ற கிராம சேவையாளர் பிரிவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும்.

புதிதாக மத்திய அரசினால் நியமிக்கப்படப் போகும் அமைச்சர்கள் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படப்போகும் அமைச்சர்கள் ஒருபக்கச் சார்பாக கொள்கைக்கு முரணாக நிதி ஓதுக்கீடு அபிவிருத்தி, நியமனங்கள், வழங்கும் பட்சத்தில் அவர்களை தமிழர்களுக்குரிய அமைச்சர்களாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இனி தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதற்கான எதிர்ப்பை மிக விரைவில் தெரிவிக்க இருக்கின்றோம்.

ஒரு இனம், கட்சி சார்பாக செயற்படுகின்ற ஆளுநரையும் பதவி நீக்கம் செய்து, அரசியல்சார்பற்ற நேர்மையான மூன்று இனங்களுக்கும் சேவைசெய்யக் கூடிய சிரேஸ்ட அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக கட்சி ரீதியாகவும், இனரீதியாகவும் ஆளுநர் செயற்பட்டுக் கொண்டு வருவதனால் தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, மூன்று மாத காலத்திற்கிடையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண நிர்வாகத்தை கட்சி ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என பல புகார்கள் உள்ளன என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்களும் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த விடயங்களில் இனியாவது தவறு விடாமல் மேற் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சீரமைத்து கிழக்கு மாகாணத்தில் பிரித்தாலும், தந்திரத்தை கைவிட்டு, கிழக்கு மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு வழிசமைக்க வேண்டும்.

இவைகளை பாராமுகமாக இருந்தால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தங்களிடம் உள்ள வாக்குப்பலம் ஊடாக தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தங்களை தாங்களே நிரூபித்துக் காட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியூதினுக்கு எதிராக விசாரணைகள் செய்யப்பட வேண்டும், விசாரணைகளின் ஊடாக அவர் குற்றவாளியென கருதும்பட்சத்தில் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்கு இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது மத்திய அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் இரா.துரைரெட்னம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers