அமைச்சர் றிசாட்டை பழித்தீர்க்க முயற்சிக்கும் எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காததே, அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர காரணம் என கூறப்படுகிறது.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, றிசார்ட் பதியூதீனுக்கு எடுத்த தொலைபேசி அழைப்பு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற முடியவில்லை என்ற காரணத்தினால், எஸ்.பி.திஸாநாயக்க, கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

அப்போது றிசார்ட் பதியூதீனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த பின்னர், றிசார்ட், மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார் என்ற உறுதிமொழியை எஸ்.பி.திஸாநாயக்க அரசாங்கத்தின் தலைவர்களுக்கு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய எஸ்.பி.திஸாநாயக்க, மகிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் பலர் இணைவார்கள் என கூறியிருந்தார். அத்துடன் 113 அல்ல 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தில் இணைய உள்ள சிலர் அல்லாவின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்காவுக்கு யாத்திரை சென்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த அரசியல் சதித்திட்டத்தின் போது, அமைச்சர் றிசார்ட் பதியூதீன் உட்பட அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்காவுக்கு யாத்திரை சென்றிருந்தனர். நாடு திரும்பிய அவர்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை.

இதன் காரணமாக அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி, எஸ்.பி. திஸாநாயக்க, இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் எஸ்.பி.திஸாநாயக்கவின் திட்டம் தவறியதால், மகிந்த ராஜபக்ச, எஸ்.பி.திஸாநாயக்கவை கடுமையாக திட்டித்தீர்த்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.

Latest Offers