மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந்திய பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நரேந்திர மோடி எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளார்.

ஜனாதிபதி நேற்று, இந்திய பிரதமருடன் பேசியதாக, ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்ததுடன் நேற்று மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் நரேந்திர மோடி முதலாவதாக பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் இலங்கையின் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துக்கொண்டதுடன் பிராந்திய நாடுகளின் ஏனைய தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

இம்முறை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கை அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.