விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை - தடுமாற்றத்தில் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.

அதேவேளை விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பல புலனாய்வு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதனிடையே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் பதற்றத்தில் இருந்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சில் காணப்பட்ட பலவீனம் மற்றும் வினைதிறனற்ற தன்மை தொடர்பான விடயங்கள் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு சாட்சிய விசாரணைகளில் வெளியாகி வருவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை ராஜினாமா செய்ய வைத்தமை மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பியமை மூலம் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பு, தாக்குதலை தடுக்க முடியாமல் போனமை தொடர்பான விடயங்களை மூடி மறைக்க ஜனாதிபதி முயற்சித்தார். எனினும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளால் அந்த கைகூடாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் தொடர்பான எதற்கும் தான் பொறுப்பில்லை என காட்ட ஜனாதிபதி முயற்சித்தாலும் பொறுப்புக் கூற வேண்டியவர்களை அழைத்து விசாரணை நடத்தும் போது தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயத்தில் ஜனாதிபதி சிறிசேன அசமந்த போக்கு உட்படபல குற்றச்சாட்டுக்கள் நேரடியாக அவர் மீது சுமத்தப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று சாட்சியமளித்த தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸின் சாட்சியங்கள் இதற்கு சிறந்த உதாரணம். 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஈஸ்டர் தாக்குதல் நடந்த கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி வரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூடவில்லை என்ற விடயம் அவரது சாட்சியத்தில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 4 ஆம் திகதி தாக்குதல் தொடர்பாக வெளியாட்டு புலனாய்வு அறிக்கை கிடைத்திருந்ததாகவும் எனினும் அதற்கான முன் ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சிசிர மெண்டிஸ் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பு ஜனாதிபதி மீது சுமத்தப்படும் நிலைமை உருவாகி வருவதால், நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினருக்கு பாதுகாப்பற்றது. எனவும் அது புலனாய்வாளர்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை எனவும் ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரால் செய்திகள் பரப்பபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை. தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோர் மட்டுமே நேற்று அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.