அமெரிக்கா மற்றும் சீனாவுக்காக வேலை செய்யும் அரசியல் தலைவர்கள்: முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டு மக்களுக்காக செயற்படுவதாக கூறி மோதிக்கொண்டாலும் இரண்டு தரப்பினரும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்காகவே வேலை செய்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்வதால், ஏற்பட்டுள்ள புதிய நிலைமையை தெளிவுப்படுத்த நாங்கள் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.

அரசாங்கம் பாதுகாப்பு படை சம்பந்தமாக அமெரிக்காவுடன் உடன்படிக்கை செய்ய தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் சோபா மற்றும் எம்.சீ.சி உடன்படிக்கை தொடர்பான விடயத்தில் பகிரங்கமாக செயற்பட்டு வருகிறது.

ஜனவரி 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை அமெரிக்க இராணுவத்தினர் தமது விமானம் மூலம் சில பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து திருகோணமலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தமது போர் கப்பலுக்கு எடுத்துச் சென்ற சம்பவத்தை அடுத்து இந்த உடன்படிக்கை தொடர்பாக விடயங்கள் கசிந்தன.

என்ன பொருட்கள் எடுத்து வரப்பட்டன என்பது தெரியாது, அவை இலங்கையின் சுங்க பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டதுடன் பல தரப்பினரிடம் கேள்விகளை எழுப்பின. இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இராணுவ பொருட்களை கொண்டு வந்ததாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.

இதன் பின்னர், இலங்கை வரலாற்றில் அவுஸ்திரேலியாவுடன் மிகப் பெரிய இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கையின் தென் பகுதியில் அமெரிக்க இராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் மற்றும் வேறு எதிர்ப்புகளுக்கும் இலங்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது. இந்த செயற்பாடுகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்தாலும் 2007 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கையெழுத்திட்ட எக்ஸா உடன்படிக்கை மூலமே அமெரிக்காவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை அரசாங்கங்கள் அவ்வப்போது எடுத்த அமெரிக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளே அமெரிக்காவின் இந்த தலையீட்டுக்கு காரணம்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அன்றைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளேக்குடன் செய்துக்கொண்ட எக்ஸா உடன்படிக்கையை மறக்கமுடியாது. இந்த உடன்படிக்கை மைத்திரிபால - ரணில் அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு புதுப்பித்தது.

இந்த உடன்படிக்கையால் இலங்கைக்கு பணம் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். பணம் கிடைக்கும் அதேவேளை குண்டுகளும் கிடைக்கும் என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம். 2007 ஆம் ஆண்டு கோத்தபாய கையெழுத்திட்ட உடன்படிக்கை பற்றி நாடாளுமன்றத்திற்கோ, அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

தற்போது சோபா உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா இதற்கு முன்னர் தனக்கு நெருக்கமான நேட்டோ நாடுகளுடனேயே இந்த உடன்படிக்கையை செய்திருந்தது.

அதேவேளை சீனா பொருளாதார ரீதியாக நாடுகளில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. அபிவிருத்தி உதவி மற்றும் வணிக ரீதியிலான திட்டங்கள் மூலம் சீனா தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.