தெரிவுக்குழுவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுதந்திரக் கட்சி எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் திறந்த விசாரணையால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு, மருதானை டார்லி வீதியிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

“ ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று முதற்தடவையாக கூடியது. இதன்போது அரசியலை இலக்காகக்கொண்டு சிலர் கேள்விகளை எழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

எந்தவொரு விசாரணையாக இருந்தாலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத விதத்திலும், தேசிய புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்தாமலுமே முன்னெடுக்கப்படவேண்டும். நேற்று நடைபெற்ற விசாரணைகளில் அந்த கோட்பாடு பின்பற்றப்படவில்லை.

எனவே, இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ள விசாரணைகளின்மூலம் புலனாய்வுத் தகவல்கள் அம்பலமாகிவிடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே, திறந்த விசாரணையை ஏற்கமுடியாது. இது விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, சாட்சியமளிக்கும் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகளும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத விதத்திலேயே கருத்துகளை முன்வைக்கவேண்டும்.’’ என்றார்.