அஸாத் சாலியை அடிப்படைவாதியாக அறிவித்துவிட்டு மஹிந்தவின் சகாக்கள் வெளிநடப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

களுத்துறை மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) முற்பகல் களுத்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலியும் பங்கேற்றிருந்தார்.

ஆளுநரின் வருகைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், அடிப்படைவாதி பங்கேற்றுள்ளதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறுகின்றோம் என கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

எனினும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம வெளிநடப்பு செய்யவில்லை. இது தொடர்பில் அவரிடம் வினவியபோது,

“மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் நடைபெற்ற கூட்டம் இது. எனவே, மக்களுக்காக பங்கேற்றேன். ஆளுநரை நீக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லையே….’’ என்று பதிலளித்தார்.

அதேவேளை, அஸாத் சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று போராட்டமொன்றும் நடைபெற்றது.