தேசியப் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் புலனாய்வுத் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்ககளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று அடியோடு நிராகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டு உள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது, நாட்டின் அரசமைப்பின் பிரகாரமே செயற்படும்.
எனவே, அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவுக்குழு உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தின் பிரகாரமே தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அப்பால் சென்று எம்மால் செயற்பட முடியாது.
தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வில் சாட்சியமளித்த இருவரும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நன்கறிந்தவர்கள்.
எனவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் எந்தவொரு கருத்தையும் முன் வைக்கவில்லை. புலனாய்வாளர்களின் விபரங்களை நாம் வெளிப்படுத்தவும் இல்லை.
அதேபோல், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படும் தகவல்களை சாட்சியாளர்கள் பகிரங்கமாக கூறவேண்டியதில்லை.
அவற்றை தனிப்பட்ட ரீதியில் முன்வைக்கலாம். எனவே, போலியான கருத்துகளை முன்வைத்து, மக்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன கூறியுள்ளார்.