மஹிந்த ஆட்சியின் போது இஸ்லாமியர்கள் மீது அடாவடி! ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நாடிய இளைஞர்கள்

Report Print Navoj in அரசியல்

மஹிந்த ஆட்சியின் போது தெற்கில் இஸ்லாமிய மக்கள் மீதும், அவர்களின் வணக்கஸ்தலங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட அடாவடி நடவடிக்கைகள் காரணமாகவே இஸ்லாமிய இளைஞர்கள் தமது மதத்தை பாதுகாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை நாடியதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு 41ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு வாழைச்சேனை மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் சிங்கள பௌத்த ஆதிக்கம் ஒன்று இருக்க வேண்டும். இங்கிருக்கின்ற சிறுபான்மை மக்கள் எல்லாம் பெரிய மரத்திலே படருகின்ற கொடியாக இருக்க வேண்டும் என்ற அரசியல் சித்தாந்தமும், அவர்களின் மத சித்தாந்தமும் பல்வேறு நெருக்குதல்களை இங்கு உருவாக்கியது. இவை எமது தமிழ் இனத்தை நோக்கியதாகவே இருந்தது.

எமது மொழி, இடம், கல்வி பறிக்கப்பட்டன. இதன்போது இந்த பேரினவாத நெருக்கடிக்குள் இருந்து மீட்சி பெறுவதற்காக தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

எனினும் எழுபதுக்குப் பின் முஸ்லிம் தலைவர்கள் அரசோடு சேர்ந்து அமைச்சு பதவிகளை எடுத்து தனி அடையாளத்துடன் வெளியேறியதன் காரணமாக தமிழர்கள் மட்டும் இந்த நாட்டின் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக செயற்படும் நிலைமை ஏற்பட்டது.

அது சாத்வீகப் போராட்டமாகவும், ஆயுதப் போராட்டமாகவும் பரிணமித்த வேளையில், இஸ்லாமியர்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி இஸ்லாமியர்கள் என்ற வரையறைக்குள்ளேயே நின்றார்கள்.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிங்கள அடிப்படைவாத அமைப்புகள் தெற்கிலே இஸ்லாமிய மக்கள் மீதும் அவர்களின் வணக்கத்தலங்கள் மீதும் பல அடாவடித் தனங்களை மேற்கொண்டார்கள். இவர்களுக்கு உரம் சேர்ப்பது போலத்தான் அன்றைய அரசின் நடவடிக்கையும் இருந்தது.

இந்த விடயங்கள் இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் அவர்களின் மதம் சார்ந்து தற்காப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவ்வாறு இருக்கின்ற போது தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வாசனை கிடைத்தது. அது ருசித்தது, பிறகு அவர்கள் தம்மை அதிலே ஈடுபடுத்தி கொண்டார்கள்.

இந்த நிலைமையில் குறித்த தாக்குதல்களை இலக்கற்றதாகவே பார்க்க முடியும். பல்வேறு இடங்களில் ஆட்கள் பிடிபட்டுள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட யாரிடம் இருந்தும் இத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற விடயம் தெரியவரவில்லை. இதனை அரசாங்கமும் அறிவிக்கவில்லை.

இந்த பயங்கரவாத செயற்பாடு துடைத்தெறியப்பட்டு விட்டது என்று அரசு சொல்லுகின்ற விடயத்தில் எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கின்றது. ஏனெனில் இலக்கு என்ன என்பது தெரியாமல் இது முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers