அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் மைத்திரி! ரிஷாட்டை பதவி விலக கோருவார்?

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கியமான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு தயாராகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, ஜனாதிபதி பதவி விலக கோருவார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர், ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரட்ன தேரர் உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தேரரின் இந்த நடவடிக்கையினை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவுகளை எடுத்திருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை டில்லியில் வைத்து இலங்கை அமைச்சர்களுடன் தனிப்பிட்ட ரீதியில் ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அத்துரலிய ரட்ன தேரரின் கோரிக்கை கவனிக்கபட வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், பிரதமருடன் தொலைபேசியில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே, நாடு திரும்பியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமான தீர்மானங்களை எடுப்பார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேரரின் உண்ணா விரத போராட்டம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால், ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers