தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு இன்று: இடைக்கால அறிக்கை 10 இல்!

Report Print Ajith Ajith in அரசியல்
62Shares

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோரே இன்று தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இன்றைய தினமும் திறந்த விசாரணை நடத்தப்படும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்த விசாரணையை நடத்துவதற்கு கூட்டு எதிரணியும், சுதந்திரக்கட்சியும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றன.

இதற்கிடையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என தெரிவுக்குழு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முதல் அமர்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.