ஜே.வி.பிக்கு நிதி வழங்கினாரா இப்ராஹீம்? அநுர விளக்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்

21/4 தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் இப்ராஹீமிடமிருந்து ஜே.வி.பி. பணம் வாங்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

21/4 தாக்குதலையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனினும், மேற்படி தாக்குதல்களுடன் இக்கட்சிகளும் தொடர்புபட்டுள்ளன என்று கூறமுடியாது.

இதேபோல்தான் ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் இடம்பிடித்திருந்த இப்ராஹீமும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனால், 21/4 தாக்குதலுடன் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளது என கூறமுடியாது.

தமது மகன்மார் தற்கொலை தாக்குதல் நடத்தவுள்ளனர் என்பதை இப்ராஹீம் அறிந்திருந்தாரா என்பது எமக்கு தெரியாது. ஆனால், அடிப்படைவாதிகளுடன் மகன்மார் தொடர்புகளை வைத்துள்ளனர் என்பது அவருக்கு தெரிந்திருக்ககூடும்.

தொழில்சார் அடிப்படையிலேயே தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்படும். அந்தவகையில் தேசியப்பட்டியலில் இடம்பிடிக்குமாறு ஜே.வி.பிதான் இப்ராஹீமிடம் கோரிக்கை விடுத்தது. மாறாக அவராக வரவில்லை.

தேசபந்து, கலாபூசணம் உட்பட அரசால் வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். சமூகத்தில் சிறந்த சேவையாளராகவும் வலம்வந்தார். கட்சியுடன் 15 வருடங்களாக தொடர்பை பேணிவந்தார். இவையே அவரை தெரிவுசெய்ததற்கான காரணங்களாக அமைந்தன.

எமது பக்கத்தில் தவறு இல்லை என கூறவில்லை. தேசியப்பட்டியலுக்கு வேட்பாளர்களை உள்வாங்கும்போது சற்று விழிப்பாக இருந்திருக்கவேண்டும். அந்த விடயத்திலேயே நாம் தவறிழைத்துவிட்டோம்.

எமது கட்சிக்கு இப்ராஹீம் பணம் வழங்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். ஆதாரங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்கலாம். பதில்களை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார் அநுரகுமார திஸாநாயக்க.

Latest Offers