கருணாநிதிக்கு பெரிய ஏமாற்றம் கொடுத்த விடுதலைப் புலிகள்! காரணம் என்ன?

Report Print Jeslin Jeslin in அரசியல்

கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து கருணாநிதி குழப்பிக்கொள்ளவில்லை என இந்தியாவின் தி இந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் பிறந்ததினத்தினை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறுகளில் ஒன்று மகிந்த ராஜபக்சவை தேர்ந்தெடுத்தது.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச மோதிய ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும்.

ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலைப் புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என நான் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு தவறு செய்தார்கள் அத என்ன தெரியுமா என கருணாநிதி என்னிடம் கேட்டார்.

சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என சுப்ரமணியத்திடம் பேசினேன்.

ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைப்புலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது. என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.

ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.

ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்.

ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலைப் புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும்.

ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார். அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை.

அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers