வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு சரியான பார்வை இருக்கின்றது - அமைச்சர் ராஜித சேனாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கத்திற்கு சரியான பார்வை இருப்பதாகவும் தெற்கில் உள்ள வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அப்படியான பார்வை இல்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி உதவி பெறுவோருக்கு சான்றிதழ்களை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக வடக்கு மக்களின் பல வளங்கள் அழிந்து போயின. தலைவர்களை இழந்தனர். அந்த தலைவர்கள் இருந்திருந்தால், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்திருப்பார்கள்.

தெற்கில் செயற்பட்ட அடிப்படைவாதத்தை தற்போதைய அரசாங்கம் ஒழித்துள்ளது. தேசிய பிரச்சினை தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. இன மற்றும் மதவாதங்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்க தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் பங்களிப்பு வழங்கினர். இதன் காரணமாக அந்த மக்களின் உரிமைகளை மாத்திரமல்ல, அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க பொன்னம்பலம் இராமநாதன் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கினார். அதே விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

அரசாங்கத்தின் வேகம் போதாது என குற்றம் சுமத்தப்படுகிறது. நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். வடக்கு, மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுடன் தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். 30 ஆண்டுகள் போர் நடைபெற்றதால், வடக்கில் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வடபகுதி மக்களுடன் நாம் ஒத்துழைப்புடன் வாழ வேண்டும்.

இனவாத மற்றும் மதவாதத்திற்கு எதிரான பிரதமர் எமக்கு இருக்கின்றார். சந்தேகம் கொள்ள வேண்டாம். தேசிய பிரச்சினை தொடர்பாக எமக்கு சிறந்த புரிதல் உள்ளது.

வடக்கில் சுகாதார சேவைகளை முன்னேற்ற அரசாங்கம் பெருந்தொகையை செலவிட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக வடக்கு மாகாணத்திற்கு சுகாதாரத்திற்கான அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers