மங்கள சமரவீரவிற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அத்துரலிய ரத்தன தேரரின் உடல் நிலை தொடர்பில் அறிந்துக்கொள்ள சென்றிருந்த அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் வைத்து இன்றையதினம் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு நான் முதலாவதாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கத்தோலிக்கர்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

கத்தோலிக்கர்களின் மனதிலிருந்த அனைத்து துயரங்களையும் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே நீக்கி வைத்துள்ளார்.

அவரின் சக்தியால் பௌத்த குருமார்களுக்கும் உதவி கிட்டியது. நாட்டு மக்களுக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அத்துரலிய ரத்தன தேரரை பார்வையிட அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றமையானது மதபேதத்தை தூண்டும் செயல் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் அவர் இவ்வாறானதொரு அறிவிப்பை மேற்கொள்வாராயின் அவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கத்தோலிக்கர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

அது மாத்திரமின்றி கத்தோலிக்க அமைச்சர்கள் வாயிலாக அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றையும் முன்வைப்போம் என தெரிவித்துள்ளார்.