பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவி? யோசனை முன்வைக்கும் அமைச்சர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமையானது அவர்களுடைய ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் சரியா பிழையா என்பதை விட ஒரு சிறந்த உதாரணமாக அவர்கள் சமூக ரீதியாக சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கினிகத்தேனை மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,

இன்று இந்த நாட்டில் ஒரு சமூகம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நான் உணர்கின்றேன். இது ஒரு பெரும் பிழையாகும். வருத்தத்திற்குரிய விடயமாகும்.

இந்த நாட்டில் சமூகங்கள் தனித்தனியே பிரிந்து நிற்பதால் எதனையும் சாதிக்க முடியாது. முஸ்லிம்களிடம் இருக்கின்ற ஒற்றுமை மலையகத்திலும் வட கிழக்கிலும், தெற்கிலும் கூட இல்லை.

நாங்கள் ஒரு தேசிய பிரச்சினைக்கு ஒன்றுபட்டு செயல்படுவது இல்லை. கட்சி ரீதியாக பிரிந்து நிற்கின்றோம். இதுவே எங்களுடைய நாட்டில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பேச்சுவார்த்தையின் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவர்களின் பதவி விலகல் இவர்கள் மீது விசாரணைகளுக்கு மிகவும் இலகுவாக அமைந்துள்ளது. விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியும்.

விசாரணைகளில் குற்றம் காணப்படுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு, குற்றம் இழைக்காதவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers