மங்கள சமரவீரவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பேராயர் இல்லம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கர்தினால் கண்டிக்குச் சென்றமை பிரிவினையை ஏற்படுத்தும் என்று மங்கள சமரவீர டுவிட்டரில் பதிவிட்டுள்ளமைக்கு கொழும்பு பேராயர் இல்லம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரரைச் சந்திக்க சென்றமை இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லம் கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தலாதா மாளிகை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை பார்ப்பதற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றிருந்ததை மிகவும் தவறான விதத்தில் விளங்கிக் கொண்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி கத்தோலிக்க மக்களே பலியாகினர். முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பயங்கரவாதிகளை ஆதரித்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிழக்கு, மேல் மாகாண ஆளுனர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காகவே ரதன தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

எனவே இந்த போராட்டத்திற்கு கிருஸ்தவர்கள் என்ற ரீதியில் எமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு சிங்கள, தமிழ், முஸ்லிம் என வெவ்வேறு இன மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்கள் வாழக்கூடிய அமைதியான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தொடர்ந்தும் எமது ஆதரவினை வழங்க வேண்டும்.

ஆனால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்கள் இதனை தவறாக புரிந்து கொண்டு பிழையான கருத்துக்களை வெளியிடுகின்றனர். கர்தினால் கண்டிக்குச் சென்றமை பிரிவினையை ஏற்படுத்தும் என்று மங்கள சமரவீர டுவிட்டரில் பதிவிட்டுள்ளமைக்கு கொழும்பு பேராயர் இல்லம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நூற்றுக்கணக்கான கிருஸ்தவ மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும், மதப்பிரிவினை இன்றி முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பேராயர் கர்தினால் அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு பொறுமையுடனும் செயற்பட்டார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதோடு கர்தினாலுக்கு எமது மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers